தமிழகத்திற்கு புகழாரம் சூட்டிய வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள்

’தமிழகத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக யுனெஸ்கோ அறிவிக்கலாம்!’ – வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள் புகழாரம்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலுள்ள சமணர் படுக்கை சிற்பங்கள், வெட்டுவான் கோயில் ஆகியவற்றைக் காண, வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள் கழுகுமலைக்கு வந்தனர்.

இந்திய சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் இந்தியாவிலுள்ள மிகவும் தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், நம் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிநாட்டு மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் இந்திய சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலா வழிகாட்டிகள், உள்நாட்டு சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் என 150 பேர் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தி, அவர்களை 10 குழுக்களாகப் பிரித்து, இந்தியா முழுவதுமுள்ள பழைமை வாய்ந்த இடங்கள், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடச்செய்து, அதன் வரலாற்றுச் சிறப்புகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சில குழுவினர், மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். இந்தக் குழுவினர், இன்று தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு வந்தனர். அவர்களுக்கு தாமரைப்பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.