இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் இயக்கப்போகும் போர் விமானம்!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் -21 பைசன் (Mig 21 Bisons) போர் விமானங்களைப் பெண் விமானிகள் இயக்க உள்ளனர்.

இந்திய விமானப் படை விமானிகளாக அவனி சதுர்தேவி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூன்று பெண்களும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வுசெய்யப்பட்டனர். முதன்முறையாக போர் விமானங்களை இயக்கும் விமானிகளாகப் பணியமர்த்தப்படும் பெண்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்ட பின்னர், தற்போது அவர்கள் மூவரும் போர்  விமானிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.

விமானப்படைத் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘மிக்-21  ரக போர் விமானங்களை இயக்க, பெண் விமானிகள் மூவரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்களைவிட, இந்த விமானங்களை இயக்குவது மிகவும் கடினம். அவர்கள், இதன்மூலம் திறமையை வளர்த்துகொள்ள முடியும். இதற்காக அவர்களுக்கு  மூன்று வார காலம் கடுமையான பயிற்சி வழங்கப்பட உள்ளது’ என்று கூறினார். இந்த மூன்று பெண் விமானிகளுக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன