ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய  பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

கோவை பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ஆடி அம்மாவாசையான இன்று (20.7.2020) பேரூர் பட்டீஸ்வரர் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு பேரூர் படித்துறை மற்றும் அருகே உள்ள தனியார் திருமண மண்டபங்களில் ஒவ்வொரு ஆண்டும் தர்ப்பணம் செய்யும் நிகழ்வு  நடைபெறும், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கில் வரும் மக்களால் கோவில் வளாகம், படித்துறை வளாகம், தனியார் திருமண மண்டபங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.  ஆனால் இந்த ஆண்டு கொரோனா பொது  முடக்கம் அமலில் உள்ளதால், பேரூர் படித்துறை மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் இறந்தவர்கள் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேரூர் வட்டாச்சியர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. மேலும் தடையை மீறி தர்ப்பணம் செய்யும் அர்ச்சகர் உள்ளிட்ட பொது மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் வெள்ளமாக காணப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.  மேலும் இன்று திதி கொடுக்கும் மக்கள் வீடுகளிலேயே அமாவாசை விரதம் இருந்து வழிப்பட்டு வருகின்றனர்.