
நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்த நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.
நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஆம் தேதியை ஐ.நா. சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009 ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இவர் சட்டம் பயின்ற பிறகு, கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார். இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப்போராட்டங்களையும் நடத்தி வந்தார்.
அதன்பின், 1961 ஆம் ஆண்டு இந்த இயக்கத்தின் ஆயுதப்படைத் தலைவராக உருவெடுத்தார். இவர்மீது மனித உரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டு, 1962 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
‘மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்கிறோம்” என அரசின் நிபந்தனையை நிராகரித்தார். நாட்டின் புதிய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் 1990 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து போராடி, இறுதியில் 1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். இவருக்கு நேரு சமாதான விருது, பாரத ரத்னா விருது, அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நெல்சன் மண்டேலா 2013 ஆம் ஆண்டு மறைந்தார்.