தென்னாட்டு காந்தி காமராஜர் பிறந்த தினம்

கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த தினமான இன்று கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.

1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1946-52
ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர். ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

தனது தன்னிகரற்ற உழைப்பால், மக்கள் தொண்டால், படிப்படியாக வாழ்வில் உயர்ந்த இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கிங் மேக்கர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் ‘கருப்பு காந்தி’ என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இவரது ஆட்சியின்போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் வழிகாட்டி என்று பாராட்டியுள்ளார்.

பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், 1975 ஆம் ஆண்டு மறைந்தார். இந்திய அரசு நமது மண்ணினுடைய மைந்தரின் தன்னலமற்ற சேவைக்காக இவரது மறைவுக்குபின் 1976 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.