உலகின் மிக ஆபத்தான இடங்களைப் பார்க்க ஆசையா?

கடவுள் கொடுத்த வரம் இயற்கை. இந்த இயற்கையில்தான் சொர்க்கம், நரகம் இரண்டும் உள்ளது. இந்த உலகில் நாம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இயற்கையின் அற்புதத்தை பார்த்து ஆச்சரியப் படும் அதே நேரம், அச்சுறுத்தும் ஆபத்தான இடங்களும் உள்ளன. அப்படி இருக்கக்கூடிய ஆபத்தான இடங்களைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

மரணப்பள்ளத்தாக்கு

கிழக்கு கலிஃபோர்னியாவில் உள்ளது மரணப்பள்ளத்தாக்கு (Death Valley). இந்த உலகம்தான் நம் வீடு என்றால்  வீட்டில் இருக்கும் அடுப்புதான் இந்த இடம். அவ்வளவு வெப்பம். சென்னைவாசிகள் 42 டிகிரிக்கே ஃபிரிட்ஜுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் ஆனால், அந்த இடத்தில் கிட்டத்தட்ட 57.7 செல்சியஸ் (134 ஃபேரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

டானாகில் பாலைவனம்

ஆப்ரிக்கா கண்டத்தில் எத்தியோப்பியாவில் உள்ளது இந்த டானாகில் பாலைவனம்.சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் கொண்ட இந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் சீறும் எரிமலைகளும் உண்டு. இலவசமாக நச்சு வாயுக்களை உமிழும் வெந்நீர் ஊற்றுகளும் அடக்கம். எப்போது எது வெடிக்கும் என்றே தெரியாத இந்தக் கொடூரமான இடத்தை ’’உலகின் நரகம்’’ என்கிறார்கள். ஆனாலும் சாகசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

மவுண்ட் வாஷிங்டன்

உலகிலேயே அதிவேகமான காற்று வீசும் இடம் இந்த மவுண்ட் வாஷிங்டன். அதிகபட்சமாக ஒரு மணிநேரத்திற்கு 203 மைல்கள் வேகத்தில்  இங்கு காற்று வீசியிருக்கிறது.

(ஷோயப் அக்தர் போட்டதே மணிக்கு 160 கிமீ தான்) மேலும் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் குளிர், திடீரென்று ஏற்படும் பனிப்பொழிவு என மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் இந்த சிகரம், உலகின் உயரமான  (கடல் மட்டத்தில் இருந்து 6,288 அடி) மலைச் சிகரங்களுள் ஒன்று..

பாம்புத்தீவு

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு விளக்கம் வேறு வேண்டுமா ? பிரேசிலில் இருக்கும் குட்டித்தீவுதான் இந்த பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு ஐந்து பாம்புகள் இருக்கிறதென்றால், இந்தத்தீவில் எத்தனை பாம்புகள் இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள்.

இங்கு இருக்கும் கலங்கரை விளக்கம்கூட ஆட்டோமேட்டட்தான்..ஏனென்றால் இங்கிருக்கும் பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையவை. போனால் மர்கயாதான் என்பதால், பிரேசில் அரசாங்கம் மனிதர்கள் செல்லத் தடை விதித்துள்ளது.

சுமத்ரா சினாபுங் எரிமலை

இந்தோனேசியா – சுமத்ரா தீவில் உள்ளது இந்த மாபெரும் மலை.. பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும் இந்த மலைதான் கடந்த ஏழு வருடங்களாக அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. ஆம், இந்த சினாபுங் மலை ஓர் எரிமலை. வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது சீற்றம் கொள்ளாமல் இருந்ததில்லை. எப்போது சீற்றம் ஏற்படும் என்ற பயத்திலும், சீற்றம் ஏற்பட்டால் சுமார் 2,500 மீட்டர் வரை தெறிக்கும் எரிமலைக் கற்களிலும் , சூழ்ந்துகொள்ளும் புகைமண்டலத்திலும் யார்தான் வாழமுடியும்?