காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்

 

– மாநகர காவல் ஆணையர் சுமித்சரண்

கொரானா தொற்று காலத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆனையர் சுமித்சரண் அறிவுறுத்ததல்

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் கலந்து கொண்டு பேசுகையில், கொரோனா தொற்று காலத்தில் கோவை மாநகர காவல் துறை சிறப்பாக செயல்பட்டு உள்ளது எனவும் ஒரு சிறிய தவறு செய்தால் அனைத்து நல்ல விஷயங்களை மறக்கடித்து விடும் எனவும் வரும் நாட்களில் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் காவலர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இன்னும் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து உள்ளது. காவலர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். நமக்காக மட்டுமல்லாமல் உடன் பணியாற்றும் சக ஊழியரின் நலன் கருதி இதனை செய்ய வேண்டும் என்றவர் பயம் காரணமாக சிலர் தயங்குவதாகவும் இதில் பயப்பட ஒன்றுமில்லை தானாக முன்வந்து சோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

அதிகாரிகளுடன் மனம் விட்டு பேசுவதுடன் கடமையை சிறப்பாக செய்வதுடன் பொறுப்பாகவும், பொறுமையாகவும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். ஜூலை மாதம் சற்று கடினமாக இருக்கும் எனவும் தினமும் வாகனத்தை சுத்தம் செய்தல் கிருமி நாசனி தெளித்தல் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்றவர் காவல் துறை இதுவரை சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக பொதுமக்களிடம் பாராட்டுகள் வருவதாகவும் வாகன சோதனை கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் சகிப்பு தன்மை கொண்டு செயல்பட வேண்டும் என்றவர் அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். இதன் பின்னர் காவல் அதிகாரிகளுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் பாலாஜி சரவணன், குற்றபிரிவு துனை ஆணையர் உமா, போக்குவரத்து துனை ஆணையர் முத்தரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதில் காவல் நிலையை ஆய்வாளர்கள் துணை ஆணையர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.