வைரஸ் தடுப்பதற்கு கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் புதிய நவீன கருவி

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சமயத்தில் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் தனது மாணவர்களை கொரோனா பரவலைத் தடுக்கும் பல்வேறு புதிய படைப்புகளை உருவாக்க ஊக்குவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஃபேரன்டைசர் (FAHRENTZER) என்ற புதிய ஒரு கருவியை இயந்திரவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் கார்த்திக் விஷால், கிஷோர் குமார், கவினேஷ் ஆகியோர் உதவி பேராசிரியர் சரவணனின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைத்து உள்ளனர்.

இது, வருகையாளர் தங்களின் அடையாள அட்டையைக் காண்பிக்கும்போழுது, அதிலுள்ள தகவல்களை பார்கோடு ஸ்கேனர் மூலமாக ஸ்கேன் செய்து அவர்களின் வருகை நேரத்தோடு சேர்த்து மேகக்கணி சேமிப்பில் (Cloud Storge) சேமித்துக் கொள்ளும்.

அவர்கள் தங்களின் கை மணிக்கட்டை இந்த கருவியின் முன் காண்பிப்பதின் மூலம் அவர்களது உடல் வெப்பநிலையைத் துல்லியமாகக் கண்டறிந்து தெரியப்படுத்தும்.

உடல் வெப்பநிலை சமநிலைக்கு மேல் இருந்தால் உடனடியாக அலாரம் மூலம் ஒலி எழுப்பி தெரிவிக்கும். வருகையாளர்களின் உடல் வெப்பநிலையையும் மேகக்கணி சேமிப்பில் சேமித்துக் கொள்ளும்.

அது மட்டுமில்லாமல் எந்த ஒரு வகையிலும் ஒருவரோடு தொடர்பில்லாமல் அவர்களது உள்ளங்கையை இந்தக் கருவியின் முன் காண்பிக்கும்பொழுது தானியங்கியாக ஹேன்ட் சானிடைசர் அளிக்கும். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவலைத் தடுக்க உதவும்.

உடல் வெப்பநிலை சராசரி அளவைவிட அதிகம் உள்ளவரை உடனடியாகக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல்,  தொடர்பின் மூலம் ஹேன்ட் சானிடைசர் பெருவதை முற்றிலும் கட்டுப்படுத்தும். ஒரு மணி நேரத்தில் சுமார் 300 நபர்கள் வரை இந்த கருவியை உபயோகிக்க இயலும்.

மேலும் இதனை கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள் பயன்படுத்த முடியும். இந்த கருவியை உருவாக்கிய மாணவர்களையும், அவர்களுக்கு வழி காட்டிய ஆசிரியர்களையும், உறுதுணையாக இருந்த இயந்திரவியல் துறையின் தலைவர் குணசேகரன் ஆகியோரை கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, கல்லூரி முதல்வர் அகிலா மற்றும் முதன்மை செயளாலர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் வாழ்த்தினர்.