நம்மை வியக்க வைக்கும் விசித்திர இடங்கள்

இந்த உலகில் நாம் அறியாத கண்டிராத பல வித்தியாசமான நம்மை வியக்கவைக்கும் பல இடங்கள் உள்ளது.

இவ்வாறு தனித்தன்மை கொண்ட இடங்களை நாம் நேரில் காணமுடியாது என்றாலும் அதை பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளுவோம்.

ஸ்பாட்டட் ஏரி (Spotted Lake Khiluk)

 Spotted Lake எனப்படுகிற இந்த ஏரி கொலம்பியாவில் உள்ள உசையூஸ் ( Osoyoos ) நகருடைய வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. உலகத்திலேயே அதிக கனிமங்களை உள்ளடக்கிய ஓர் ஏரி இது தான். இது நீங்கள் நினைப்பது போல சாதாரண நீர்நிலை கிடையாது. சுமார் 365 தனிப்பட்ட சிறிய குளங்களாக இது காணப்படுகிறது, உதாரணமாக உடலில் தேமல் வருவது போல இதனுடைய அமைப்பு இருக்கும். ஒவ்வொரு சிறிய குளங்களிலும் தனித்தன்மை வாய்ந்த அதிகப்படியான ரசாயன கனிமங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக மெக்னீசியம் சல்பேட், கால்சியம் மற்றும் சோடியம் சல்பேட். இந்த கனிமங்களின் காரணமாக இதில் உள்ள நீரானரது பல்வேறு நிறங்களை கொண்டுள்ளது. இந்த நீர் நிலையில் காணப்படும் கனிமங்கள் உலகின் பல அரிய நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கண்டிப்பாக உலகத்தில் உள்ள தனித்துவமான இடங்களில் இதுவும் ஒன்று.

பிளேம் நீர்வீழ்ச்சி (Eternal Flame Falls)

நியூயார்க்கில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகான நீர்வீழ்ச்சி தான் இந்த Eternal Flame Falls. இதுல என்ன விசேஷம் என்றால் இங்கே உள்ள பாறைக்கு அடியில் சிறிய பகுதியில் எரிவாயு கசிவு உள்ளது. மேலும் அதிலிருந்து தீப்பிழம்பும் வெளியேறுகிறது. சுற்றிலும் நீரோட்டம் இருந்தாலும் பல காலமாக இந்த இடத்தில் மட்டும் தீ பற்றிய நிலையிலேயே உள்ளது. இந்த இடம் பற்றி மீடியாக்களில் வரும் செய்திகளால் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், இந்த இடத்துடைய சுற்றுசூழலை கருத்தில் கொண்டு வனத்துறையினர் உதவியுடன் மக்கள் இங்கே கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

ரோன் மற்றும் ஆர்வ் நதிகளின் சங்கமம் (Confluence Of Rhone And Arve Rivers)

சுவிட்சர்லாண்டில் அருகருகே ஓடக்கூடிய இரு ஆறுகள் பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம். ரோன் மற்றும் ஆர்வ் என்பது இங்கே ஓடக்கூடிய பிரபலமான ஆறுகள். ஒரு ஆற்று நீரின் நிறம் நீலம் மற்றொன்று பிரவுன். இந்த நீரின் அடர்த்தி காரணமாக இந்த இரு நீர்நிலைகளும் கலப்பதில்லை. இவை இரண்டும் ஜெனிவா நகரை சென்றடைகிறது. இவை சேராமல் இருக்க பல காரணங்கள் இருந்தாலும் பார்ப்போரை வெகுவாக இதனுடைய அழகு கிறங்கடிக்குதுன்னு சொன்னால் நிச்சயம் மிகையாகாது. கண்டிப்பாக இந்த இயற்கை அழகை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போய் பாருங்க…

யோனாகுனி நினைவுச்சின்னம் (Yonaguni Monument)

இந்த யோனாகுனி நினைவு சின்னமானது ஜப்பானின் ருக்யு தீவில் அமைந்துள்ளது. இது கால மாற்றத்தால் கடலில் புதைந்த பகுதியாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இன்று வரை இது இயற்கையா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற குழப்பம் இருந்து கொண்டு தான் உள்ளது. இங்கே உள்ள பழமைவாதிகள் இது ஏலியனால் உருவாக்கப்பட்டதாக நம்புகிறார்கள். கடலுக்கடியில் காணப்படும் கற்களால் உருவான படைப்புகள் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச்செல்லும் என்றே சொல்லலாம். மர்மங்கள் நிறைந்த பல சாகசங்களை இங்கே நீங்கள் காண முடியும்.