நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர்

தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்திய, நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் 1925 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி நாமக்கல்லில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.

இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா என்ற நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார்.

இவர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். இவர் நடித்த இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், சுக்ராச்சாரியார் உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

சினிமா கதாநாயகனாக அறிமுகமான இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், இதயக்கனி உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்களை பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 2006 ஆம் ஆண்டு மறைந்தார்.