குழந்தையின் பிறவி இதயக்கோளாறை குணமாக்கி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

அரிதான பிறவி இதய குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தையை இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் அனுபவம் வாய்ந்த சிறந்த திறமையான மருத்துவக்குழுவினரை கொண்டு சிறப்பாக செய்து முடித்துள்ளது ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை.

சிவகாசியைச் சேர்ந்த 6கிலோ எடை கொண்ட  பிறந்து 9 மாதமே ஆன குழந்தை கடுமையான மூச்சுத்திணறலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. சற்று நேரத்தில் மூச்சு விடுவதை நிறுத்திய குழந்தை  உடனடியாக தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, குழந்தை இதயவியல் நிபுணர் டாக்டர் தேவ பிரசாத் தலைமையில் அமைந்த குழுவால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

மேற்கொண்டு பரிசோதித்ததில், லட்சத்தில் ஏழு பேருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய டெட்ராலஜி ஆப் ஃபாலட் வித் பல்மனரி அட்ரிஸியா எனும் அரியவகை பிறவி இதய குறைபாட்டால் இக்குழந்தை பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் இதயத்தில் பெரியதுளை இருந்ததால் நுரையீரலுக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்பட்டு இருந்தது. மாற்று வழியில் ரத்தம் நுரையீரலுக்கு சென்று கொண்டிருந்த நிலையில்  உடலில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, இதயச் செயலிழக்கும் (கார்டியாக் அரெஸ்ட்) நிலைக்கு சென்றது.

இந்த நிலையில் அவசர அறுவை சிகிச்சை மட்டுமே குழந்தையின் உயிரைக் காக்கும் என்பதால் உடனடியாக மருத்துவமனையின் இதய அறுவைசிகிச்சை நிபுணர்களான டாக்டர் தியாகராஜ மூர்த்தி, டாக்டர் விஜய் சதாசிவம், டாக்டர் ரீனஸ், டாக்டர் கார்த்திக் குமரன் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் நரேந்திர மேனன், டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழுவினை அமைத்து குழந்தையின் இதய கோளாறை மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தனர்.

தற்போது இதயக்குறைபாடு, நுரையீரலின் ரத்த ஓட்டச் சிக்கல் ஆகியவை திறமையாக கையாளப்பட்டு, குழந்தையின் உடல்நிலை சீராகியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரத்தில் குழந்தை முழுவதுமாக குணமடைந்து தற்போது வீடு திரும்ப தயாராக உள்ளது.

இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் “பிளேலாக்-டாஸ்ஸிக் சன்ட்” என்ற தற்காலிக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு, முழுமையாக சரி செய்யும் அறுவை சிகிச்சை பின்னாளில் மேற்கொள்ளப்படுவதே மருத்துவத் துறையில் வழக்கமாக இருந்து வருகிறது.

குழந்தையின் நலன் கருதி இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளில் திறன் வாய்ந்த மருத்துவக்குழுவுடன் ஒரே அறுவை சிகிச்சையில் முழுமையாக சரி செய்யப்பட்டது. மருத்துவத் துறையில் இத்தகைய அறுவை சிகிச்சை மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

திறமை வாய்ந்த மருத்துவ குழு, செவிலியர்களின் உதவி, மருத்துவமனை நிர்வாகம் தந்த ஊக்கம், ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் இக்கடினமான சிகிச்சையில் வெற்றிகண்டு ஒரு குழந்தையின் உயிரையும் காத்த இந்த நிகழ்வு கொரோனா தொற்று போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ உலகிற்கு மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரும் பெருமைகொள்ளத்தக்க செய்தியாகும்.