சாலை கூறும் சரித்திரம் –  தெலுங்கு வீதி

கோயம்புத்தூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வீதியின் பெயர்தான் இந்த தெலுங்கு வீதி. ஆர் எஸ். புரத்தின் தென் கோடியில் உள்ள காந்தி பூங்கா பகுதியில் இருந்து ராஜவீதி நோக்கி செல்வதுதான் இந்த தெலுங்கு வீதி.

அத என்ன தெலுங்கு வீதி?  ஏன் இந்த வீதி இவ்வாறு மொழியின் பெயரால் அழைக்கப்படுகிறது?

இந்த வீதி மொழியின் பெயரால் அழைக்கப்படவில்லை. இந்த வீதியின் பழைய பெயர் தெலுங்கு பிராமணர் வீதி என்பதாகும். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் குறிப்பிட்ட சமூகக்குழுக்களாக வாழ்ந்து வருவது என்பது இயல்பாக இருந்தது. அன்றைய கிராமப்புறப்பகுதிகளிலும் இந்த வழக்கம் இருந்து வந்தது. அந்த வகையில் தெலுங்கு பிராமணர்கள் பெரும்பான்மையாக குழுவாக இப்பகுதியில் வசித்து வந்த தன் காரணமாக இந்த வீதியின் பெயர் தெலுங்கு பிராமணர் வீதி என்று பெயர் உருவானது.

தமிழ்நாட்டில் எப்படி தெலுங்கு பிராமணர்கள் வந்தார்கள் என்பதற்கு வரலாறு விளக்கம் தருகிறது. கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கோவை நகரப் பகுதியானது பழங்காலந்தொட்டே பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்திருக்கிறது. வடக்கே மைசூர் அரசர்கள், கிழக்கே சோழர்கள், தெற்கே பாண்டியர்கள், மேற்கே சேரர்கள், இறுதியாக பிரிட்டிஷ்காரர்கள் உள்பட இன்னும் பலரின் கீழ் இந்த பகுதிஆளப்பட்டு வந்துள்ளது. அந்தந்த ஆட்சியாளர்களின் காலத்தில் அப்பகுதியில் இருந்து இங்கு குடியேறிய மக்கள் பலர். அதைப் போலவே வணிகம், தொழிலுக்காக வந்தவர்களும் உள்ளனர்.

அவ்வகையில் கோயம்புத்தூரில் பல நூற்றாண்டுகளாக தெலுங்கு, கன்னடம் பேசுபவர்கள் வசித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பிட்ட ஒரு மொழியை பேசும் பல பிரிவினரும் இங்கு குடியமர்ந்துள்ளனர். தெலுங்கு என¢று எடுத்துக்கொண்டால் தெலுங்கு பிராமணர் தொடங்கி, தெலுங்கு தேவாங்க செட்டியார், நாயுடு, இருபத்து நான்குமனை தெலுங்கு செட்டியார், போயர், அருந்ததியர் என்ற பல பிரிவினர் இங்கு வசித்து வருகிறார்கள்.

அதெல்லாம் சரி, தெலுங்கு பிராமணர் வீதி எப்படி தெலுங்கு வீதியானது என்று கேட்கிறீர்களா? தமிழக அரசு, சாதிகளின் பெயர்கள் பொது பெயர் பலகைகளில் இருக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்ததை அடுத்து பிராமணர் என்ற பெயர் நீக்கப்பட்டு இந்த வீதியின் பெயர் தெலுங்கு வீதி என அழைக்கப்பட்டு வருகிறது.