கொங்கு மண்டலத்தின் தாகம் தீர்க்குமா தாமரை?

 

திருமதி.வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி…

 

தமிழ்நாட்டின் தலையாய சிக்கல்களின் ஒன்றாக இன்று தண்ணீர் பிரச்சனை உருவெடுத்துள்ளது. இது விவசாயத்திற்கு தொடங்கி குடிநீர் வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பகுதிகளில் நடைபெற்ற தற்கொலை இன்று தமிழகத்திலும் நடைபெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஏழை முதல் பணக்காரர் வரை குடிநீரை விலை கொடுத்து வாங்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு ஒரு தீர்வு காண மக்களுகாக ஒரு தாகம் தீர்க்கும் யாத்திரையை தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்த உள்ளது. இதை முன்னின்று வழிநடத்த ஒரு தகுதியான தலைவராக திருமதி. வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.

திருமதி. வானதி சீனிவாசன் நாடறிந்த பெண் அரசியல்வாதிகளில் முக்கியமானவர், வழக்கறிஞர், நல்ல பேச்சாளர், மக்கள் நலனில் உண்மையான அக்கரை கொண்டவர். மக்கள் பிரச்சனைக்காக அஞ்சாமல் போராடுபவர். இந்த தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரையை முழுக்க முழுக்க மக்கள் நலனுக்காக முன்னெடுத்திருகிறார்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆட்சியாளர்களை தட்டி கேட்கவும், பொறுப்பில் உள்ளவர்களை செயல்படுமாறு செய்யவும் இந்த யாத்திரையை அவர் தலைமை ஏற்று முன்னின்று நடத்துகிறார்.

இந்த சிறப்பிதழில் கோவை மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள், அவை தற்போது உள்ள நிலை அவற்றை சீர்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என அனைத்தும் அவரது வழிகாட்டுதலின் படி வெளியிடப்படுகிறது.

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி தமிழ்நாட்டில் நெல் வயலில் யானை கட்டி போரடித்திருக்கிறார்கள். இது ஏதோ கல்லணை கட்டப்பட்ட கரிகால் சோழன் காலத்தில் அல்ல. நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பிரிட்டிஷ் ஆவணங்களில் கூட தமிழ்நாட்டின் உழவின் பெருமை சொல்லப் பட்டிருக்கிறது. காவிரி பாசனம் பெறும் பகுதிகளில் ஏக்கருக்கு 5000 கிலோ, ஏரிப்பாசனம் பெறும் செங்கல் பட்டில் ஏக்கருக்கு 3500 கிலோ நெல், சேலத்தில் 4000 கிலோ நெல் என்ற பட்டியல் போகிறது.  நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட அவ்வளவு நீர்வளம், நிலவளம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அதனால்தான் மகாகவி பாரதியார்,

“காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்

கண்டதோர் வையை பொருநை நதியென

மேவிய ஆறு பலவோடத் திரு

மேனி செழித்திடும் தமிழ்நாடு” என்று பாடினார்.

ஆனால் இன்று குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடுபவர்களையும், காலிக்குடங்களுடன் மறியல் செய்பவர்களையும், கேன் வாட்டர் பிசினசையும் பார்த்தால் பாரதியார் மனம் நொந்து போவார். இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டி விட்டு, முன்னோர்கள் வெட்டிய ஏரி, குளங்களையெல்லாம் தூர்வாராமல், பக்கத்து மாநிலங்களில் எல்லாம் கையேந்தி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

நமது கோவை மாவட்டத்தில் தண்ணீரின் நிலைமை இன்னும் மோசம். மேற்குத்தொடர்ச்சி மலையென்னும் இயற்கை அன்னையின் மடியில் அமர்ந்திருக்கும் செல்லக்குழந்தைதான் கோயம்புத்தூர் மாவட்டம். சில்லென்ற காற்றும், சிறுவாணித்தண்ணீரும், நொய்ய லாறும், பவானியும் இந்த மாவட்டத்தின்  சிறப்புகள் என்பார்கள். ஆனால் அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.

இன்றைய நிலையில் சிறுவாணி தண்ணீர் கோயம்புத்தூருக்கு வந்து சில மாதங்களாகிறது. சில்லென்ற காற்று இல்லை. அனல்காற்றுதான் வீசுகிறது. நொய்யலும், பவானியும் படுத்த படுக்கையாக இருக்கின்றன. எழுந்து நடமாட, ஓடிவர எத்தனை மாதங்களாகும் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஒரு பக்கம் வறண்டநிலமும், வாடிய பயிர்களும், பட்டுப்போன மரங்களும் பரிதாபமாக காட்சி தருகின்றன. இன்னொரு பக்கம், குடிக்க நீரின்றி அலையும் மக்கள் கூட்டம், கூடவே இருந்த பாவத்துக்காக தண்டிக்கப்பட்டு, அடிமாடாக கிடைத்த விலைக்கு சந்தைகளில் விற்கப்படும் உழவு மாடுகள், பசுக்கள், ஆடுகள் என வாயில்லா ஜீவன்கள், வனத்துக்குள் அழிந்தது போக, ஊருக்குள் நுழையும் யானைகள் என்று பரிதாப நிலை இருக்கிறது. காஞ்சி மாநதி பாய்ந்த பூமி இன்று காய்ந்து போய்க்கிடக்கிறது.

என்றும் வற்றாமல் நீரோடும் பவானி நதி இன்று நிலை கெட்டுப்போய் அப்படியே நகராமல்  நிற்கிறது.  காட்டுக்குள் உள்ள லண்டானா எனும் களைச்செடியும், கிராமம், நகரமெங்கும் பரவியுள்ள டில்லி முள் எனும் சீமைக்கருவேல மரமும்தான் பசுமையாக காட்சி தருகின்றன. மற்றபடி கோவை மாவட்டம் இன்று பாலை நிலமாகத்தான் காட்சி தருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள எந்த கிராமம், ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, உங்கள் தந்தை, தாய் வயதுள்ள அல்லது ஐம்பது வயதான ஒருவரை கேட்டுப் பாருங்கள். உங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள குளத்தில், நதியில், கிணற்றில் நீர் மட்டம் எப்படி இருந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள்.

குளத்தில், கிணற்றில், நதியில் குளித்ததை சொல்வார்கள்; மீன் பிடித்ததை சொல்வார்கள்; நீந்தியதைச்சொல்வார்கள், அந்த தண்ணீரில் விவசாயம் செய்ததைச் சொல்வார்கள். இப்போது உங்கள் பக்கத்தில் உள்ள குளத்தில், கிணற்றில், நதியில் நீந்தி, குளிக்க  முடியுமா?, மீன் பிடிக்க முடியுமா? முதலில் வருடம் முழுவதும் அவற்றில் தண்ணீர் இருக்கிறதா? என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த ஆண்டு மழை குறைவு என்பதால் குடிநீர் இல்லை, தென்மேற்கு பருவமழை நம்மை ஏமாற்றி விட்டது என்றெல்லாம் சொல் கிறார்களே, அது உண்மையா? மேலோட்டமாக பார்த்தால் இது உண்மை போலத்தான் தோன்றும். ஆனால் சற்று சிந்தித்து பார்த்தால் உண்மை நன்கு விளங்கும்.

முன்பெல்லாம் மழை பெய்யும் நாட்களில் கிடைக்கும் நீர் இயற்கையாக நதியின் நீரோட்டத்தோடு போய் கடலில்தான்  கலந்து வந்தது. அதை ஆங்காங்கே அணைக்கட்டுகள் கட்டி நீரோட்டத்தை தடுத்து நீரைக் கால் வாய்கள் மூலம் நீரைக்கொண்டு வந்து குளங்களை வெட்டி சேமித்து வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தினார்கள். குளங்கள் என்பவை நீர் சேமிக்கும் தொட்டிகள் மட்டுமல்ல. அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறு போன்ற நீர்நிலைகளிலும் நீர் ஊறும்.

நமது கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் நதியில் அமைந்துள்ள அணைக் கட்டு, கால்வாய், குளங்களின் அமைப்பைப் பார்க்கலாம். உலகத்தின் எந்த ஒரு மிகச்சிறந்த நீர் மேலாண்மை நிபுணத்துவத்துக்கும் சிறிதும் சளைக்காத வகையில் அமைந்ததுதான் இந்த நொய்யல் நதியில் அமைந்துள்ள அணைக்கட்டுகளும், குளங்களும் ஆகும்.

மேற்கு மலைத்தொடரின் காலடியில் தொடங்கி நொய்யலாறு காவிரியுடன் கூடும் இடம் வரையிலும் நீலி அணைக்கட்டு, புதுக்காடு அணைக்கட்டு, சித்திரைச் சாவடி அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக் கட்டு, கோயம்புத்தூர் அணைக்கட்டு, குறிச்சி அணைக்கட்டு,  வெள்ளலூர் அணைக்கட்டு, சிங்காநல்லூர் அணைக்கட்டு, ஒட்டர் பாளையம் அணைக்கட்டு, இருகூர் அணைக்கட்டு, சூலூர் அணைக்கட்டு, ராசிபாளையம் அணைக்கட்டு, மாதப்பூர் அணைக்கட்டு, சாமளாபுரம் அணைக் கட்டு, கருமத்தம்பட்டி அணைக்கட்டு,  பள்ள பாளையம் அணைக்கட்டு, செம்மாண்டம்பாளையம் அணைக்கட்டு, மங்கலம் அணைக்கட்டு, திருப்பூர் அணைக்கட்டு, மண்ணறை அணைக்கட்டு, முதலிபாளையம் அணைக்கட்டு, ஆண்டிபாளையம் அணைக்கட்டு, கத்தாங்கண்ணி அணைக்கட்டு   என்று மொத்தம் 23 அணைக்கட்டுகள் உள்ளன.

உக்குளம், புதுக்குளம், கோளரம்பதி குளம், நரசம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், நேரூ பெரிய குளம், குனியமுத்தூர் செங்குளம், குனியமுத்தூர் சின்னக்குளம், கோயம்புத்தூர் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி, வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், ஒட்டர் பாளையம் குளம், கண்ணம்பாளையம் குளம், இருகூர் குளம், நீலம்பூர் குளம், சூலூர் பெரிய குளம், சூலூர் செங்குளம், சாமளாபுரம், செம்மாண்டம்பாளையம் குளம், ஆண்டி பாளையம் குளம், மண்ணறை குளம், முதலிபாளையம் குளம், கத்தாங்கண்ணி குளம்  என்ற அணைகளின் எண்ணிக்கையைத் தாண்டி  குளங்களின் எண்ணிக்கை மிஞ்சி நிற்கிறது.

ஒவ்வொரு நதிக்கரையிலும் தான் மனிதகுல நாகரீகம் தோன்றியது என்பதற்கேற்ப நொய்யல் நதியின் கரையோரமெங்கும் மனித குலம் குடியேறி வாழ்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதகுலம் வாழ்ந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரங்களுடன் கூறுகிறார்கள்.

மேற்கே போளுவாம்பட்டி தொடங்கி, பேரூர், வெள்ளலூர் தொடங்கி, கிழக்கே கொடுமணல் வரை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த தொல்லியல் ஆதாரங்களைக் கண்டெடுத்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நொய்யல் சமவெளியில் நெல்லும், கரும்பும், வாழையும், மஞ்சளும், தென்னையும் பயிரிடப்பட்டு உழவர்களின் ஆதாரமாக இந்த நொய்யல் சமவெளி இருந்து வந்திருக்கிறது.

யார் வெட்டினார்கள்?

இன்றுள்ள குளங்கள், ஏரிகளை எல்லாம் யார் வெட்டினார்கள்? நம்முடைய முன்னோர்கள் தங்கள் தீர்க்க தரிசனத்தால் உருவாக்கியவை இந்த நீர்நிலைகள் ஆகும். மன்னர்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கி இந்த நீர்நிலைகளை வெட்டினார்கள். எங்கெல்லாம் ஊர்கள் உருவானதோ அங்கெல்லாம் பயிர் செய்ய, குடிநீருக்கு என்று மக்களுக்காக குளங்களையும், கிணறுகளையும் வெட்டினார்கள்.

ஏன் வெட்டினார்கள்?

இந்த ஆண்டு மழை குறைவு, பருவமழை பொய்த்து விட்டது என்றெல்லாம் இப்போது சிலர் சொல்கிறார்களே, அதைப்போலவே அந்த காலத்திலும் மழை குறைந்திருக்கிறது. பருவமழை பொய்த்திருக்கிறது  ஆனால் அன்றிருந்த ஆட்சியாளர்கள் இதை யெல்லாம் உணர்ந்து, தீர்க்கதரிசனத்துடன் மக்களின் நலன் கருதி இந்த குளங்களையும், கிணறுகளையும் வெட்டினார்கள். அவற்றைப்பாதுகாக்க ஆட்களை நியமித்தார்கள். வருடாவருடம் உண்மையாகவே கைகளால் தூர் வாரினார்கள். குளங்களும், கிணறுகளும் வற்றாமல் நீரை சேமித்து தேவைப்படும் போது மக்களுக்கு வழங்கி வந்தன.

பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் அடிப்படை வாழ்வாதா£ரமாக திகழ்ந்த இந்த நதியின் சுவடு இன்று அழிக்கப்பட்டு வருகிறது.

பத்து முதல் முப்பது அடி வரை ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மின் மோட்டார்களின் பயன்பாட்டுக்கு வந்த பிறகு நூறு, நூற்றைம்பது அடியாக கீழே போனது. அப்போதும் இந்த குளங்களும் கிணறுகளும் நம்மைக் காப்பாற்றின. அது ஓரளவு முறையான பராமரிப்பும், தூர்வாருதலும் நடந்த காலம்.

இன்று என்ன நிலை?

கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட நிலத்தடி நீர்மட்டம் ஐநூறு அடியாக மாறி, இன்று பல இடங்களில் ஆயிரம் அடிக்கும் கீழே போர்வெல் போட்டால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை. ஒரு காலத்தில் மற்றவர்களுக்கு உணவளித்து வந்த நொய்யல் நதிக்கரையோர விவசாயிகள் இன்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு வேறு தொழில்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டு வெகுநாட்களாகிறது.

நதியோடிய இடத்தில் ஒரு பள்ளமும், அதில்  வழியெங்கும் கலக்கும் சாக்கடைகளும், கழிவுகளும், குப்பைகளும் தான் நமது நொய்யல் நதியா? இந்த காரணத்தால் நொய்யல் நதியை சிலர் இறந்த நதி என்று சொல்கிறார்கள். எண்ணிப்பாருங்கள். காலம், காலமாக நமது முன்னோர் காலத்திலிருந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு உணவூட்டி, உயிரூட்டி வளர்த்தது இந்த நொய்யல் நதி இறந்து விட்டதா?

நொய்யல் நதியின் குழந்தைகளாக இருந்த குளங்களும் அவற்றை இணைக்கும் கால்வாய்களும் இன்று பாழ்பட்டு வருகின்றன. புனிதமான நீரைச்சேமித்த குளங்கள் இன்று கழிவுகளை சுமக்கின்றன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் தங்கள் கடும்உழைப்பாலும், அறிவாலும் உருவாக்கி பராமரித்து வந்த குளங்கள் இன்று குப்பைக்குழிகளாக காட்சி தருகின்றன.

இந்த கோடை காலத்தில் குடிப்பதற்கு மட்டும் குடிதண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. இருக்கின்ற ஆடு, மாடுகளை கொல்வதற்கும் மனமின்றி, சந்தையில் வந்த விலைக்கு விற்று விட்டு தானும் தற்கொலை செய்வதுதான் இன்று விவசாயிகளின் நிலை. வான்பொய்ப்பினும் தான் பொய்யா நதிகளும், குளம் தொட்டு வளம் பெருக்கின மன்னர்களும் வரலாறு படைத்த தமிழ்நாட்டில்தான் இந்த நிலை இருக்கிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்? 

நாம்தான் காரணம். நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள்தான் காரணம். சரியான தகுதி படைத்தவர்களை, உண்மையான அக்கறை மிக்கவர்களை தேர்ந்தெடுக்காததும், தேர்ந்தெடுத்தவர்கள் கடமையைச்செய்யாத போது தட்டிக் கேட்க மறந்ததும் தான் இதற்குக் காரணம். இப்போது நம் நாட்டில் என்ன மன்னராட்சி நடக்கிறதா? இல்லை அந்நியர் ஆட்சி நடக்கிறதா? நாம் தேர்ந்தெடுத்த  மக்கள் பிரதிநிதிகள் தானே ஆட்சி நடத்துகிறார்கள்? பிறகு ஏன் இந்த நிலை? சிந்திக்க வேண்டாமா? தெருவெல்லாம் பாலாறும், தேனாறும் ஓட வேண்டும் என்றா மக்கள் கேட்கிறார்கள்? குடிப்பதற்கு குடிநீர், உயிர் வாழ்ந்திட  உணவு உற்பத்தி செய்வதற்கு தேவையான பாசனத்துக்கு தண்ணீர், இதைத்தானே கேட்கிறார்கள்? இதை செய்ய வாய்ப்பு இருந்தும், பொறுப்பில்  இருந்தும் செய்யாதது யார்? நாம் சுததந்திரம் பெற்று எவ்வளவு காலம் ஆகிறது? குடிநீருக்கு கூட அலைவதுதான் சுதந்திரமா?

இதையெல்லாம் நினைவூட்டத் தான் இந்த தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை நடக்கிறது.

இந்த குளம், குட்டை, நதி, அணைக்கட்டு, நீர்த்தேக்கம் என எல்லா நீர்நிலைகளும் யார் கட்டுப்பாட்டில் உள்ளன? நம்மால் தேர்ந்தெடுத்த தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான்  இவை  உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி. நகராட்சி, மாநகராட்சி, பொதுப்பணித்துறை, என்று ஏதோ ஒரு வகையில் அரசு கட்டுப்பாட்டில்தான் இந்த நீர்நிலைகள் காலம், காலமாக  உள்ளன. அவற்றையெல்லாம் முறையாக பராமரித்து வந்திருந்தால் இந்த நிலை வருமா?

தமிழ்நாட்டில் பல அணைக்கட்டுகள் உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் இப்பகுதிக்கு தொடர்புடையதாக தெற்கே பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் ஏழு அணைகள், மேற்கே சிறுவாணி, வடக்கே பில்லூர் அணை இவையில்லாமல் இன்னும் பல சிறு தடுப்பணைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் பராமரிக்க பெரிய அதிகாரிகள், அரசு பணியாளர்கள் குழு இருக்கிறது, மக்கள் வரிப்பணத்தைச்செலவு செய்யும் இவர்களுக்கு மக்களுக்கு குடிநீரும், விவசாயிகளுக்கு பாசன நீரும் தரும் கடமை மட்டும் கிடையாதா? ஓராண்டு மழை பொய்த்தால் அதற்கேற்ப தண்ணீரை சேமித்து வைக்க இந்த ஐம்பது ஆண்டுகளில் இவர்களுக்கு நேரமே கிடைக்கவில்லையா?

ஒவ்வொரு ஆண்டும் முறையாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரித்து வந்திருந்தால் இந்த அவல நிலை வந்திருக்காது. பல இடங்களில் குளங்களை ஆக்கிரமித்ததில் அரசாங்கத்துக்கே பங்கு இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குளங்களின் பரப்பளவு பல இடங்களில் சுருங்கி விட்டது. சில இடங்களில் குளங்களும் நீர்நிலைகளும் மாயமாக மறைந்து விட்டதும் நடந்திருக்கிறது. கோயம்புத்தூரில் அருகே சிங்காநல்லூரில் உள்ள கமலா மில் குட்டை சிங்காநல்லூர் வெளியூர் பேருந்து நிலையமாக மாறி விட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நீர்நிலைகளை பராமரிப்பதற்காக ஒதுக்கப்படும் தொகை முறையாக செலவிடப் படுகிறதா என்ற மக்கள் கேட்கும் கேள்விக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. இவர்கள் பராமரிக்கும் முறைகளின் மீதே தற்போது ஐயம் எழும் அளவுக்கு தற்போதைய நிலை உள்ளது.

கோயம்புத்தூர் நகரத்தின் மையத்தில் உள்ளது கோயம்புத்தூர் பெரிய குளம். கரையைச்சுற்றி வர மட்டும் சுமார் ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஒரு காலத்தில் இப்பகுதியைச் சுற்றி விவசாயம் கொடி கட்டிப்பறந்தது. குளம் என்பதற்கு இலக்கணம் என்று இந்த பெரிய குளத்தைக்கூறலாம்.

குளத்தின் வட மேற்கே அதிராஜராஜ வாய்க்கால் வழியாக பல நூறு ஆண்டுகளாக நொய்யல் நீர் வந்து குளத்துக்குள் சேருகிறது. குளம் நிரம்பியவுடன் அதில் அமைந்துள்ள மதகுகள் மூலம் தேவையான பகுதிகளுக்கு பாசனநீர் செல்லும். பெரிய குளம் நிரம்பியவுடன் உபரி நீர் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள திறப்பின் வழியாக கிழக்கே அமைந்துள்ள வாலாங்குளத்துக்கு செல்லும்.

மழை வெள்ளம் போன்ற காலங்களில் பெருக்கெடுத்து வரும் வெள்ளநீர் குளத்தை கரைகளை உடைத்து குளத்தை அழித்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பாதுகாப்பு ஏற்பாடாக தென்மேற்கு மூலையில் உபரி நீர் வழிந்தோடும் வகையில் ஒரு கலிங்கு அமைந்துள்ளது. வெள்ளம் பெருகி வரும் காலங்களில்  உபரி நீர் அதன் வழியாக வழிந்தோடி சென்று நொய்யலாற்றிலேயே கலந்து விடும். யாருக்கும் எவ்வித பாதிப்பும் கிடையாது.

இந்த தொழில் நுட்பம், நீர் மேலாண்மையும் எந்த ஒரு வெளிநாட்டினரும் நமக்கு தந்ததில்லை. இப்போதுள்ள எந்த அரசுத்துறையும் இதை உருவாக்கவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் மக்கள் நலனுக்காக ஆழ்ந்து சிந்தித்து பண்பட்ட அறிவோடு உருவாக் கியிருக்கிறார்கள். அதை பின்வந்தவர்கள் பராமரித்து வந்திருக்கிறார்கள்.

இன்று இந்த பெரிய குளத்தின் நிலை?

இன்று குப்பைகள் கொட்டும் பெரிய  குழியாக, சீமை கருவேல மரங்கள் மண்டிய காடாக, தண்ணீரா, சாக்கடை நீரா என்ற முடிவு செய்ய முடியாத படி ஒரு மூலையில் சிறிது நீருடன் காட்சி தருகிறது. இதை பராமரிக்க வேண்டிய அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அரசு தனது சாக்கடை நீரை பெரிய பெரிய குழாய்கள் மூலமாக இந்த பெரிய குளத்தில்தான் வந்து சேருமாறு செய்திருக்கிறது. மழைக்காலத்தில் வரும் சுத்தமான மழைநீரும் கூட இந்த சாக்கடை நீருடன் சேர்ந்து சாக்கடை நீராக மாறும் என்பது அரசுக்கு தெரியாதா?

இத பெரிய குளத்துக்கு மட்டுமல்ல. கிட்டத்தட்ட எல்லா குளங் களுக்கும் பொருந்தும். பாலூட்டும் தாயாக இருந்த குளங்களை தூர் வாரி சரியாக பராமரிக்காமல் குப்பைக்குழிகளாக மாற்றியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம்.

இன்று பரம்பிக்குளம், ஆழியாறு, சிறுவாணி, பில்லூர் என்று பெரிய பெரிய அணைகளிலும் நிலைமையை சமாளிக்க தண்ணீர் இல்லை. நொய்யல், பவானி, சிறுவாணி நதிகளிலும் நீரோட்டம் இல்லை. நிலத்தடி நீர் என்பது அதல பாதாளத்துக்கு போய்விட்டது. தண்ணீருக்காக வேண்டி கடன் வாங்கி ஆழ்குழாய் கிணறு தோண்டும் விவசாயிகள் தண்ணீருக்கு பதில் வரும் காற்றைக்கண்டு கண்ணீர் கூட இல்லாமல் அதிர்ந்து நிற்கிறார்கள். கூலித்தொழிலாளி கூட தனது கூலியில் ஒரு பகுதியை குடிக்கும் தண்ணீருக்கு கேன் வாட்டர் வாங்க செலவிடும் நிலை வந்து விட்டது. இனி எப்போது மழை வந்து நமது நீராதாரங்களின்  நிலைமை சீராகும் என்று யாருக்கும் உறுதியாக தெரியவில்லை.

இந்த நிலையை மாற்றுவது தான்  இந்த தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரையின் நோக்கம். வாருங்கள் கரம் கோர்ப்போம்.