டிஜிட்டல் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு

கொரோனாவின் பாதிப்பு ஒருவரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் மிகவும் அச்சுறுத்திவருகிறது. இதனால் பாதிக்கப்படாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தொழில் துறைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வு அளித்த பொழுது பெரும்பாலான தொழில் நிறுவங்கள் பாதி தொழிலாளர்களை கொண்டு இயங்கியது. அதில் போதிய வருவாய் இல்லாததால் ஆள் குறைப்பு, சம்பள குறைப்பு என பலரும் பல நடவடிக்கைளை எடுத்துவந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக நீடித்த இந்த நிலை, தற்பொழுது இரண்டு வாரங்களாக புதிய வேலைவாய்ப்புகளும், பணியமர்த்தலும் அதிகரித்து வருகிறது என தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதில் முக்கியமாக, கல்வித் தொழில்நுட்பம் (edutech), டிஜிட்டல் வர்த்தகம், டேட்டா பிராசஸிங், விநியோக அமைப்பு, வங்கித் துறை, வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள், மருத்துவம், காப்பீடு, டிஜிட்டல் வல்லுநர்கள், நிதித் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய ஊழியர்கள் சேர்ப்பு அதிகரித்துள்ளது.

ஊரடங்கின் பொழுது பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தல் நடவடிக்கை 80 விழுக்காடு இருந்த நிலையில், தற்பொழுது பணியமர்த்தல் நடவடிக்கை 50 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக சிஐஇஎல் ஹெச்ஆர் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நாடு முழுவதும் 39 முக்கிய நகரங்களில் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பால் தனிமனித இடைவேளை அவசியம் என்பதால் டிஜிட்டல் துறை மற்றும் அதற்கான பணியாளர்களின் தேவைகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.