ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ‘முத்தரப்பு குழு’ கோரிக்கை

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டு அமைப்புத் தலைவர் ஹென்றி, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அதில், தமிழக பத்திர பதிவுத் துறையில் குறைந்தபட்சம் 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு மட்டுமாவது முத்திரைத்தாள் கட்டணத்தை 4 சதவீதமாகவும், பதிவுக் கட்டணத்தை ஒரு சதவீதமாகவும் நிர்ணயிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பட்டா வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெறும் வகையில், அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காத பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அரசு இந்த வரன் முறை சட்டத்தின் கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டும்.

சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர்புற அமைப்பு இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் ஏற்கனவே மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்து, இன்னும் முடிவுறாமல் (தீர்வு ஏற்படாமல்) இருக்கும் விண்ணப்பங்களின் மீது, விரைவாக எதிர்வரும் 15 நாட்களுக்குள் அங்கீகாரம் வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் இந்த துறைகளில் காலதாமதம் இன்றி, 30 நாட்களுக்குள் அங்கீகாரம் பெறும் வகையில், அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, ஒற்றைச்சாளர முறையை விரைவாகக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் அரசு துறைகளின் துணை அதிகார அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகார வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறை சார்ந்த முடிவுகளை எடுக்கவும், ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அரசு தரப்பில் ‘முத்தரப்பு குழு’ ஒன்றை அமைத்து அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினால் ரியல் எஸ்டேட் துறை வெகுவாக வளர்ச்சி பெறும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தெரிவித்துள்ளனர்.