சுதந்திரப் பற்றாளர் நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்தநாள்

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், 1913 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டத்திலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

1929 ஆம் ஆண்டு அனந்தபூருக்கு மகாத்மா காந்தியின் வருகை இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருடைய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டார்.

இவர் ஆந்திரப்பிரதேச மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், இந்திய சட்டமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்த இவர் 1951 ஆம் ஆண்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பிறகு, ராஜ்ஜிய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றினார். பிறகு 1962 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய பணியை 1964 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.

இவர் திறமையாகவும் நேர்மையாகவும் பணி ஆற்றியதால் 1977 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக இந்தியாவின் குடியரசுத் தலைவராக (1977-1982) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய இளம் வயதிலேயே தீவிர சுதந்திரப் பற்றுக்கொண்ட இவர் 1996 ஆம் ஆண்டு மறைந்தார்.