தூய்மை பணியாளர்களை கொண்டாடுவோம்

இன்று பணிக்கு செல்லும் அனைவரும் 8மணி நேர வேலை, 8 மணி நேர மன மகிழ்வு, 8 மணி நேர உறக்கம் என்பதை அனுபவித்து கொண்டு இருக்கின்றார் என்றால் அதற்கு இந்த உழைப்பாளர் தினம் தான் காரணம்.

ஆரம்ப காலத்தில் பணியாளர்களின் பணி நேரம் என்பது கால அவகாசம் இல்லாமல் இருந்தது. இதனை மாற்ற தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட நாள் தான் உழைப்பாளர்கள் தினம்.

ஒவ்வொரு தொழிலாளர்களும் தங்களுக்கு வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் மருத்துவம், காவல் துறை, தூய்மை பணி என மொத்தம் 3 பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதில் தற்பொழுது இந்த தொழிலாளர்கள் தினம் சாலைகளில் நின்று தற்போது வந்த நோய்த்தொற்றுக்கும், வரபோற நோய்த்தொற்றுக்கும் சேர்த்து போராடி வருகின்றனர்.
விடியல் விடியும் முன்னரே விரைந்து தன் பணியை முடிந்து விடுவார்கள்.

சூரியன் உதித்து, குயில்கள் கூவி, காகம் கரைந்து தூக்கம் கலையும் போது நாம் குப்பையில் விழிக்க கூடாது என்பதற்காக அதில் இறங்கி சுத்தம் செய்கின்றனர். கடந்து சென்றாலே மூச்சை அடைக்கும் நாற்றத்தை, சற்றும் சளைக்காமல் சுத்தம் செய்து விடுகிறார்கள்.
இதுவரை துப்புரவு பணியாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், தற்போது முதலமைச்சரின் அறிவிப்பின் படி “தூய்மை பணியாளர்கள்” என்று தற்போது அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வதால் தான் நாம் நல்ல கற்றை சுவாசிக்க முடிகிறது, மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் அவலம் உள்ளது, இந்த நிலையை மாற்ற வேண்டும். கழிவுகளை அகற்ற இயந்திரத்தை பயன்படுத்தினால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையலாம். அதற்காக மொத்தமும் இயந்திர மயமாக்க வேண்டாம், அதனை தேவைக்கு பயன்படுத்தலாம். எல்லா ஆண்டுகளும் எல்லா தொழிலாளர்களையும் கொண்டாடும் நாம், இந்த ஆண்டு தூய்மை பணியாளர்களை கொண்டாடுவோம், இந்த ஆண்டு இவர்களுக்கானது.

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடு தான்…