முழு ஊரடங்கு முடிவிற்கு பிறகு சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரித்திருகிறது. மேலும் காய்கறிகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. இன்று ஒருநாள் மட்டும் மாலை 5 மணிவரை கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த 3 மாநகராட்சிகளில் காய்கறிகள், மளிகை கடைகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் கூடுதல் நேரம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பழைய நடைமுறையில் ஊரடங்கு தொடரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி சந்தையில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது. சின்னவெங்காயம் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும், தக்காளி 10 ரூபாயிலிருந்து 30 ரூபாய்க்கும் , கத்தரி 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. உழவர் சந்தைக்கும் , காய்கறி மார்க்கெட்டுக்கும் இடையே விலை வித்தியாசம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு நாட்களுக்கு பின் அத்தியவாசிய பொருட்களின் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் வரிசையில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வாங்கிச்செல்கின்றனர்.
காந்திபுரம் மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளிலும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது.