விவசாயிகளைப் போற்றுவோம்

கொரோனா காலகட்டத்தில் எந்தத் தொழிலும் நடக்காவிட்டாலும், எந்த நிறுவனமும் செயல்படாவிட்டாலும் விவசாயம் அமைதியாக நடைபெற்று வருகிறது. காரணம், எந்த வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சாப்பிடாமல் யாரும் இருக்க முடியாது. உணவின்றி ஓர் அணுவும் அசையாது. எந்தத் தொழில் நின்றாலும் மனிதன் வாழ்ந்துவிட முடியும் என்பதை உணர்ந்த இதே காலகட்டத்தில், விவசாயம் செய்யாவிட்டால் மனிதன் நடமாடுவது இயலாது என்பதையும் அனைவரும் உணர்ந்துவிட்டனர். இதனாலேயே விவசாயம் அனைத்துத் தொழிலுக்கும் முன் நிற்கிறது.

மனித நாகரிகத்தின் அடிப்படையே, ‘விவசாயம்’தான். உழவு (அ) வேளாண்மை (அ) கமம் எனக் கூறப்படும் இத்தொழிலின் நோக்கம், உணவுக்காகவும் பிற பயன்களுக்காகவுக் பலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதும், கால்நடை வளர்ப்பதுமாகும். உலகின் முதல்நிலைத் தொழிலான வேளாண்மையில் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வந்துள்ளான். வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள், தொழில்நுட்பங்கள், பண்பாடுகளைச் சார்ந்து ‘உழவு’ இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஆனாலும் அதன் நோக்கம் மாறுவதில்லை. தமிழில் வேள் எனும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மையின் பொருள், ‘கொடை’, ‘ஈகை’ என்பதாகும். வேளாண் என்றால், வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்றும், வேளாண்மை என்றால், ‘விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்’ என்றும் பொருளாகும்.
சுமார் 10,000 ஆண்டுகள் பழமையான இந்தத் தொழில் நிலப்பரப்பிலும் மகசூலிலும் பெரிய அளவில் மாற்றங்களைக் கண்டுள்ளது. இப்போது இதில் புதிய தொழில்நுட்பங்களும் புதிய பயிர்களும் ஒருங்கிணைந்துள்ளன. செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், இயந்திரமயமாக்கல் ஆகியவற்றால் 20 ஆம் நூற்றாண்டில் இத்தொழில் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்தது. உணவு உற்பத்தி மக்கள்தொகைக்கேற்ப பன்மடங்கு பெருகியது. தமிழகத்தில் சில இளைஞர்கள் நமது பாரம்பரிய விவசாய முறை, நீர் மேலாண்மை, பண்ணைக்குட்டைகள், எருக்குழிகள் அமைத்தல், ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம், வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், கலப்புப் பண்ணைத் திட்டம், பல அடுக்கு விவசாய முறை, ஜீரோ பட்ஜெட் விவசாயம் எனப் பல்வேறு வழிகளில் தன்னிறைவு விவசாயம் புரிந்து நல்ல முறையில் இலாபமும் பெற்று வருகின்றனர் என்பது நல்ல செய்தி. அரசும் தற்போது இதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இவற்றைப் பயன்படுத்தி இந்த மண் பயனுற, விவசாயம் செழித்திட பலரும் இத்தொழிலில் ஈடுபட வேண்டும்.
வெளிநாடுகளில் வேலை, கணினித் தகவல்தொழில்நுட்பம் ஆகியவற்றைக் காட்டிலும் விவசாயமே பிரதானமான தொழில் என்பதை அனைவரும் தற்போது உணர்ந்திருப்பர். இந்நிலையில் இளைஞர்களும், பெற்றோர்களும், குறிப்பாக விவசாயத்தைப் பாரம்பரியமாக செய்துவரும் விவசாயக் குடும்பத்தினர் இத்தொழிலை விட்டு விலகாமல் தொடர்ந்து நாட்டிற்கான தங்கள் பணியை செவ்வனே செய்திட வேண்டும். சமூகத்தில் விவசாயம் செய்பவர்கள் மிகச்சிறந்த மனிதர்கள் மட்டுமல்ல, மதிப்பிற்குரியவர்களும்கூட. தற்சார்பு வாழ்க்கைக்கும் இதுவே சாராம்சம். வீட்டில் இருந்தே பணி செய்யும் சூழல் இப்போது பெரும்பாலும் அனைத்துத் துறையிலும் பெருகிவிட்டது. ஆனால், விவசாயிகள் எப்போதுமே இந்நாட்டிற்காக வீட்டிலிருந்தே எப்போதும் இரவு, பகல் பாராமல்; சுப, அசுப காரியங்கள் பாராமல்; மழை, வெயில் பாராமல் உழைத்து வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆகவே, விவசாயிகளைப் போற்றுவோம்.