விவசாயம் பாடமல்ல புரிதல்

நாம் ஒவ்வொரு நாளும் உணவு என்ற ஒன்றை தான் ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஏழையே, பணக்காரனோ, பூச்சியோ, புழுவோ எதுவாக இருந்தாலும் இவை அனைத்தும் உணவு சங்கிலிக்குள் வந்துவிடும்.

மேல்மட்ட கழிவு கீழ்மட்ட உணவு என்பதை கொண்டு அனைத்து உயிர்களும் இந்த உணவு சங்கிலிக்குள் வந்துவிடும். இவை அனைத்தும் மண்ணில் விளையும் உணவை கொண்டு இயங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மனிதன் இதுவரை பெற்றதில் மிகப்பெரிய வரம் இயற்கையும் அதன் ஒரு பகுதியான விவசாயமும் தான். எத்தனை தொழில்நுட்பங்கள், அறிவியல் வளர்ச்சிகள் நாம் பெற்றாலும் மண்ணுக்கு மாற்று பொருள் என்பதை இதுவரை யாரும் நினைத்து பார்த்தது இல்லை. இதனை செயற்கையாக கொண்டு வரவும் முடியாது.

வெறும் மண்ணுதான் என்று குறைச்சு எடை போடாதீர்கள். மண்ணுக்கும் அறிவு உள்ளது. நமக்கு வேண்டாத கழிவுகளை மக்க செய்கிறது. அதுவே ஒரு விதை போட்டால் அதனை முளைக்க வைக்கிறது. மண்ணும் அதில் முளைக்கும் மரமும் என்றுமே தனித்துவம் வாய்ந்தது. இதனை பாதுகாத்தாலே போதும் நமக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சாபக்கேடில் இருந்து விடுபட்டுவிடலாம்.

இன்று வரை நாம் செய்த பாவம் நமக்கே தெரியும். இயற்கை சீர்கேடும், சூழ்நிலை மாற்றமும், பருவ நிலை மாறுபடும் நமது அழிவிற்கான அடையாளங்களாக உள்ளது. நாம் இல்லமால் இந்த பூமி வாழ்ந்துவிடும். ஆனால், நம்மால் இந்த பூமி இல்லமால் வாழ முடியாது.
நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் விவசாய பிரச்சனையில் இருந்து விவசாயமே பிரச்சனை என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது. விவசாயம் செழித்தால் தான் மக்கள் நலமும் வளமும் பெருகும். தற்போது விவசாயமும், விவசாய நிலமும், மனிதர்கள் நலமும் குறைந்துவிட்டது. இதனை மீண்டும் பழங்கால, நாம் மறந்த முறைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது நம்மாழ்வார் என்ற விவசாய விஞ்ஞானி தான்.

 

இவரது வழிமுறைகளும், கூறுகளும் மனித வாழ்வியலோடு சார்ந்த இயற்கை விவசாயம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதுவும் தற்போது பயிர் வளம் பெருக யுரியாவை பயன்படுத்தினார்கள். இதனால் மண்ணின் வளம் குறைந்து விடுகிறது என்பதால் அதற்கு மாற்றாக இயற்கை உரங்களை தயார் செய்து அதனை வைத்து பயிர் வளத்தை பெருக்கியும் காட்டினார். நவீன காலமுறைகளில் நமது வாழ்க்கையை நம்மால் மாற்றி கொள்ள முடியும் என்பதையும் இவர் நம்பினார்.

விவசாயம் என்பது வாழ்க்கை முறையை சார்ந்தது தான் என்பதற்கு ஆதாரமாக கரூரில் ஒரு கிராமத்தில் உள்ள வறண்ட பயனற்ற நிலத்தில் “வானகம்” என்ற ஒன்றை உருவாக்கி அதில் வாழ்க்கை முறையுடன் கூடிய விவசாயத்தை மற்றவர்களுக்கு பயிற்றுவித்தார். இங்கு ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்தும் இயற்கையின் வழியில் அவனது தயாரிப்பில் அதனை பூர்த்திசெய்து கொள்ள முடியும்.
இதில் விவசாயம், மருத்துவம், கல்வி ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளது. இந்த வானகத்தின் இலக்கு நஞ்சில்லா உணவு, மருந்தில்லா மருத்துவம், சுவரில்லா கல்வி என்பவை தான். உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்றாகி விட்டது.

இதனை புதுப்பிக்க நஞ்சில்லா உணவுக்கு மருந்தில்லா விவசாயம் செய்யப்படுகிறது. அப்படி நஞ்சில்லா உணவு கிடைத்தாலே மருந்து தேவையில்லை. அந்த உணவை வைத்தே மருத்துவம் செய்ய முடியும். இறுதியாக சுவரில்லா கல்வி, கல்வி என்றாலே அது பள்ளியில் தான் கிடைக்கும் என்பது கிடையாது என்பதில் உறுதியாக இருந்தார் நம்மாழ்வார். கல்வியை களத்தில் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் இதன் அடிப்படை. அதே போல் விவசாயமும் பாடமல்ல கற்று கொள்ள அது ஒரு புரிதல். இவைகள் தான் இவரது இறுதி காலம் வரை இருந்த எண்ணம்.

இவர் 2009ல் ஆரம்பித்த வானகம் இவரது மறைவிற்கு பிறகும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. விவசாயிக்கு விவசாயம் கற்றுத்தர தேவையில்லை என்பதால் இதனை மாணவர்களுக்கும், மாணவர்களுக்கும் கொண்டு சென்றார். தற்போது இது ஒரு புது விதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. வருங்காலத்தில் விவசாய இளைங்கர்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைகளாக பார்க்கும் காலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்தால் நல்லது தானே. நம்மாழ்வாரின் விதை என்றும் மக்கி போகது.