வட இந்திய தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவு

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கும் பணியை பல்சமய நல்லுறவு இயக்கம் செய்து வருகிறது.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன. முக்கிய தொழில் நகரமான கோவையில் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி தவித்து வருகின்றனர். இதே போல ஆதறவற்றோரிம் ஆங்காங்கே உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம் போன்ற பகுதிகளில் வசித்து வரும் வட இந்திய தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் பணியை கோவை சாய்பாபா காலனி காவல் நிலையம் மற்றும் ஜெகந்நாதன் டெக்ஸ்டைல்ஸ் இணைந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய முதல் நாள் முதல் இந்த பணியை மேற்கொண்டு வருவதாகவும், சாலைகளில் உள்ள ஆதரவற்றொர் இந்த உணவு பொட்டலங்களை பெறும் போது தகுந்த இடைவெளி விட்டு நின்று இந்த உணவு பொட்டலங்களை பெற்று செல்வதாக அவர் தெரிவித்தார். நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தவித்து வருபவர்களுக்கு மூன்று வேளையும் ஆதரவற்றோரை தேடி சென்று உணவு வழங்கி வரும் இந்த நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.