துய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

கோவையில் ஊரடங்கு உத்தரவு நேரங்களில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர்களுக்கு தினமும் உணவு வழங்கும் திட்டத்தை நேரு நகர் அரிமா சங்கத்தினர் துவக்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவாமல் கட்டுபடுத்தும் விதமாக வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் பணியாற்றிவரும் காவல்துறை, மருத்துவத்துறை, மற்றும் துப்புரவுத் தொழிலாளிகள். கொரோனா பரவாமல் தடுக்க பெரும் முயற்சிகளை தூய்மைபணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் இணைந்து கோவை ஏர்போர்ட் பகுதியில் உள்ள காளப்பட்டிக்கு உட்பட்ட 33,34,35,36 வார்டு பகுதிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் மற்றும் ஆதரவற்ற வட இந்திய தொழிலாளர்கள் என 500 பேர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் திட்டத்தை துவக்கியுள்ளனர்.

இது குறித்து நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளரும், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில் பேசுகையில் நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல் படுத்தி உள்ள நிலையில் சமூக பணியில் ஈடுபட்டு வரும் நேரு நகர், வீரியம்பாளையம், ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் பணி புரியும் காவலர்கள், தூய்மைபணியாளர்கள் மற்றும் இந்த பகுதியில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு இந்த ஊரடங்கு திட்டம் அமலில் உள்ள வரை தினமும் உணவு வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த சமூக பணியை நேரு நகர் அரிமா சங்க நிர்வாகிகள் காளியப்பன், பாஸ்கரன், நந்தகுமார், ஜி.எஸ்.டி ரகுராம், ரகுபதி, லோகநாதன், ஹரீஸ், பரிமளம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.