ஒண்ணுமே புரியல, தமிழகத்தில…

ஒரு காலத்தில் ஊரெல்லாம் செய்திகளை தெரிந்து கொள்ள தமுக்கு அடிப்பார்களாம். ஆனால் இன்று தமுக்கு அடிப்பதற்கு பதிலாக செய்தித்தாள், தொலைக் காட்சி என்று பல்வேறு ஊடகங் கள் வந்தவிட்டன. அதிலும் தொலைக்காட்சி ஊடகம் என்பது உடனுக்குடன் செய்தியை நேரில் காண்பிப்பதுடன், அடிக்கடி பிரேக் நியூஸ் வேறு போட்டு அசத்தி விடுகிறார்கள். போதாதற்கு பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று மக்கள் கலக்குகிறார்க்ள். ஆக அந்த வகையில் செய்தியைப் பொறுத்தவரை நாம் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

கிட்டத்தட்ட இந்த ஊடகங்கள் நம் மீது செலுத்தும் செல்வாக்கு மூலமாகத்தான் நாம் வாழ்க்கையில் பல்வேறு முடிவுகளை எடுக்கிறோம். அதுவும்  பொது விஷயங்களில் இந்த ஊடக நணபர்கள் நம் மீது செலுத்தும் செல்வாக்கு சாதாரணமானதல்ல. பல நேரங்களில் கருத்துக்கணிப்புகள் அவர்கள் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்து விடுகின்றன. பெரும்பாலும் சாதாரண ஆடை வாங்குவது தொடங்கி பல்வேறு முக்கிய  விஷயங்களையும் நாம் இந்த தாக்கத்தினால்தான் நாம் முடிவு செய்கிறோம்.

அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளைப் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை.

பல்வேறு பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிகின்றன. விவசாயிகள் பிரச்சினை, அவர் களின் தற்கொலை வரை போய் விட்டது; அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு புறம் போராடி ஓய்ந்தார்கள்; நெடுவாசல், கதிராமங்கலம் என்று சுற்றுச்சூழல் போராட்டங்கள் தொடர்கின்றன. இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏதோ போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். கோடை காலத்தில் மட்டும் ஏற்படும் குடிதண்ணீர் பிரச்சினை, இன்று அன்றாட சிக்கலாகி விட்டது. மழை அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ஆங்காங்கே வந்து போய் விடுகிறது. விவசாயத்துக்கு உயிர் தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

தக்காளி, வெங்காயம் மற்ற காய்கறிகள் விலை இறக்கை கட்டி பறக்கிறது; பள்ளிக்கல்வி தொடங்கி, உயர் கல்வி வரை பல நிலைகளில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. நீட் தேர்வு வேண்டும், வேண்டாம் என ஒரு புறம் மாணவர்களையும், பெற்றோரையும்  கதற விடுகிறார்கள்.

இதெல்லாம் செய்தித்தாள் களிலும் மற்ற ஊடகங்களிலும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதற்கு எல்லாம் மேலாக அன்றாடம் நம்மை பரபரப்புக்கும் பதட்டத்துக்கும் உள்ளாக்கும் ஒரே தொடர்செய்தி எது தெரியுமா?

இன்றைய தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியின் பிரச்சினைதான்.

அதுதான் நம்மை எல்லாம் போட்டு அப்படி பிறாண்டி எடுக்கிறது. ஏனென்றால் மேலே சொன்ன பிரச்சினைகள்  போல பல பிரச்சினைகள் காலம், காலமாக இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அப்போது எல்லாம் குறையைச் சொல்லி அழுவதற்கு ஒரு அரசாங்கமோ, அல்லது பிரதிநிதிகளோ இருந்தார் கள். அவர்கள் கொஞ்சம் காது கொடுத்து கேட்டார்கள். அது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்து வந்தன.

ஆனால் இப்போது அப்படி இல்லை. காது கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் பிரச்சினையை நாம் தினம்தோறும் காது, மூக்கு, கண் எல்லாம் கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  நம்மை ஆளுகின்ற இடத்தில் உள்ள ஆளுங்கட்சியின் பிரச்சினைகள் தினம் ஒன்றாக புதிது, புதிதாக உருவாகின்றன. அவை தினந் தோறும் நம்மை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திக்கொண்டு இருக் கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மறைவுக்குப்பிறகு இது வரை இந்திய  தொலைக்காட்சி வரலாற்றில் எந்த சேனலிலும், செய்தித்தாளிலும்  வந்திராத அளவுக்கு  தற்போது தினம் தோறும் காட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

என்ன நடக்கிறதென்று ஒண்ணு மே புரியல .. .. ..

ஒரு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; ஒரு முதலமைச்சர் ராஜினாமா செய்கிறார்; இன்னொரு முதலமை ச்சர் வருகிறார். இன்னும் ஏதேதோ நடக்கிறது; திடீரென்று தர்மயுத்தம் என்ற ஒரு குரல் கேட்கிறது.

இதுவரை ஒன்றாக இருந்தவர்கள் இரண்டாக பிரிந்து செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசிக்கொள்கிறார்கள். இரண்டாக இருந்த பிரிவினை சில மாதங்களில் மூன்றாக மாறுகிறது.

சில நாட்களுக்கு முன்பு மூன்று பிரிவுகளில் இரண்டு பிரிவுகள் இணைந்து மொத்தத்தில் மூன்று இரண்டாகிறது.

இதற்கிடையில் ஆளுநர் வருகிறார். களத்தில் எதிர்க்கட்சிகள் குதிக்கின்றன. மெஜாரிட்டி, உண்டு, இல்லை என்று தினந்தோறும் பட்டிமன்றம் நடக்கிறது; மொத்த மக்கள் தொகையும் இதை கேட்டே ஆக வேண்டும் என்ற அளவுக்கு ஊடகத்தில் செய்திகள் தினந்தோறும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. விவாதங்களும் சூடுபிடித்துக் கொண் டே இருக்கின்றன. இதில் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள்; ஒரு குழு இந்திய குடியரசுத்தலைவரை சந்தித்து மனு கொடுக்கிறது.

இடையில் சிஸ்டம் சரியில்லை என்று ஒருவர் கூறுகிறார்; இன்னொருவர் ட்விட்டரில் போட்டு தாக்குகிறார். ஆனால் அவர்கள் இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்று இன்று வரை யாருக்கும் உறுதியாக தெரியவில்லை என்பதுதான் ஹைலைட்.

மெல்ல மெல்ல மக்கள் பணிகளும், தேவைகளும் சிக்கல்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஜனநாயகத்தில் மக்கள் முறையிட ஒரு அமைப்பு வேண்டும். அதுதான் அரசாங்கம். ஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் சொந்த சிக்கல்களே தீராது இருப்பது போல ஒரு தோற்றம் நிலவுகிறது.

தற்போதுள்ள தேவைகள், எதிர்காலத்துக்கான வளர்ச்சித் திட்டங்கள் இவற்றில் கவனம் செலுத்த வேண்டிய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது கட்சி தினந்தோறும் அறிக்கைப் போரில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதாக ஒரு காட்சி மக்கள் கண் முன் தெரிகிறது. இந்நிலையில் தங்கள் தேவைகளை மக்கள் யாரிடம் முறையிட முடியும்?

எனவே இது தொடர்புடைய பெருமக்கள் அருள் கூர்ந்து ஏதாவது ஒரு முடிவை விரைவாக எடுத்து மக்களுக்கான அன்றாடப்பணிகளில் ஈடுபடுவது அவர்களுக்கும் நல்லது. மக்களுக்கும் மிக நல்லது. அரசியல்வாதிகள்  என்பவர்கள்  ஆட்சி அதிகாரம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல; அரசியலில் பொறுப் பாக நடந்து கொள்ளவும், மக்களுக்கு பதில்சொல்லவும் கடமைப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டும்.

இல்லையென்றால் மக்கள் சமுதாயத்தின் முன் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையை காலம் உருவாக்கும்.