ஊர் சொல்லும் கதை: காரமடை

கோயம்புத்தூரிலிருந்து மேட்டு ப்பாளையம்  செல்லும் சாலையில் அமைந்துள்ள இடம்  காரமடையாகும். இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக் கெல்லாம் காரமடை யானது மையமான இடம்  என்பதோடு நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் போக்குவரத்து வசதிகளும் இருப்பதால் இதை முக்கியத்துவம் பெறகிறது.

இங்குள்ள கோவில், வீதிகளின் அமைப்பு ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது அருகில் உள்ள மேட்டுப்பாளையத்தை விட இது பழமையான ஊர் என்ற முடிவுக்கு வர முடிகிறது.

இங்குள்ள அரங்கநாதர் கோவில் பழமையான கோவில் என்பதோடு மற்ற கோவில்களில் காணப்படாத சில சிறப்புகளும் இங்கு காணப்படுகின்றன.

இந்த கோவிலில் தாசர்கள் எனப்படும் பக்தர்கள் ரங்கநாத சுவாமிக்கு விரதம் இருந்து பந்த சேவை, தண்ணீர் சேவை, கவாள சேவை என சேவைகள் மூலம் வழிபடுகின்றனர்.

இந்த பந்தசேவை வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். மாசி மாதம் ரங்கநாதர் கோவிலில் நடக்கும பிரம்மோத்சவத்தின் போது இந்த சேவைகள் நடக்கும். தாசர்கள் பெரிய பந்த சேவைகளை தங்கள் தோளில்  எடுத்துக்கொண்டு கோவிந்த பராக் என்று சொல்லி, ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த ரங்கநாதர் கோவிலை வைத்துத்தான் இப்பகுதிக்கே காரமடை என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரைச்செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. அப்போது இப்பகுதியில் உள்ள மாடுகளை மேய்க்கச் சென்ற ஒருவர் தனது பசுக்களில் ஒன்று தினந்தோறும் ஒரு புதரின் அருகே சென்று தானாக பாலை கறந்து விடுவதை கவனித்து வந்தார். ஒரு நாள் மாலை நேரம் அந்த புதரை விலக்கி பார்த்த போது சுயம்புவாக அங்கே காட்சியளித்த இறைவனை கண்டு நடுக்கமுற்று மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

இருட்டானதும் கால்நடைகள் தாமாக வீடுகளுக்கு திரும்பி வந்துவிட்டன. மாடுகளை ஓட்டிக் கொண்டு போனவர் வராத காரணத்தால் தேடிச்சென்றவர்கள் மயக்கமடைந்து கிடந்தவரை எழுப்பி சுயம்பு பற்றிய விவரத்தை அறிந்தனர். அந்த சுயம்பு இருந்த காரைச் செடியின் அருகே கொண்டு சென்ற இனிப்பு, பழம் ஆகியவற்றை வைத்து தீப்பந்தத்தின் ஒளியால் வணங்கினர். இதனைக்கேள்விப்பட்ட மக்கள் எல்லாம் வந்து வணங்கத்தொடங்கினர்.

அவ்வாறு காரைச்செடியின் அடியில் அமர்ந்து அருளிய இறைவனுக்கு ஆலயம் அமைந்தது. அந்த கோவில் அமைந்த இடமும் காரைமடை என அழைக்கப்பட்டது. பின்னாளில் அதுவே மருவி காரமடை ஆனது.