மார்ச் 15-ல் மாஸ்டர் ஆடியோ ரிலீஸ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் பேராசிரியர் வேடத்தில் நடிப்பதால் தான் இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஒரு சில காட்சிகள் மட்டும் விஜய் நடிக்க வேண்டி உள்ளது. இதனால் அடுத்தகட்ட பணிகளை படக்குழு தொடங்கி உள்ளது. மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் மார்ச் 15-ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய்யின் முந்தைய படங்களைப் போன்று ஆடியோ வெளியீட்டு விழாவை கல்லூரி வளாகத்தில் நடத்தாமல் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் விஜய் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

எனவே ஆடியோ வெளியீட்டு விழாவில் வழக்கம் போல் விஜய் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ந் தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் டிராக் மற்றும் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜய் பாடியா குட்டிக்கதை பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.