கோலாகல ஜல்லிக்கட்டு திருவிழாவில் காளைகளை கட்டி தழுவிய காளையர்கள்

 

கோவை, செட்டிப்பாளையம், L&T  பைபாஸ் சாலை அருகில் உள்ள மைதானத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் சிறப்பு பார்வையாளராக தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமைதாரர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். முன்னதாக, மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட கலந்துகொண்ட அனைவரும் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தலைமையில் ஜல்லிக்கட்டு உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற  உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஒ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி,  மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விளையாட்டில் சீறிப்பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்த மாடுவிடி வீரர்களுக்கு இரண்டு கிராம் தங்க காசும், பிடிபடாத மாடுகளின் உரிமைதாரர்களுக்கு இரண்டு கிராம் தங்க காசும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அதிக காளைகளை பிடித்து (20 மாடுகளை பிடித்து) சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை சேர்ந்த அஜய்க்கு முதல் பரிசாக மாருதி கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும், 19 மாடுகளை பிடித்து இரண்டாம் பரிசு பெற்ற  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கு இருசக்கர வாகனம் (பைக்) உள்ளிட்ட பரிசுப் பொருட்களும், 10 மாடுகளை பிடித்து மூன்றாம் பரிசு பெற்ற மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்கு இருசக்கர வாகனம் (ஸ்கூட்டி) உள்ளிட்ட பரிசுப்பொருட்களும், சிறந்த பிடிபடாத காளையாக தேர்வு செய்யப்பட்ட முதல் பரிசு பெற்ற ஜல்லிக்கட்டு சங்க பேரவைத் தலைவர் பி.ஆர். ராஜசேகருக்கு முதல்பரிசாக மாருதி கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும், அய்யம்பட்டி ஆண்டிச்சாமி கோயில் காளை,  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காளை,  அய்யனார் குளம் ராக்கம்மாள் கோயில் காளை ஆகிய மூன்று மாடுகளும் சமப்புள்ளிகளை பெற்ற மூன்று மாடுகளுக்கும் சரிசமமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்.