கண்களை பாதிக்கும் புகைப்பழக்கம் !

உடலில் பிரச்னை என்று வராத வரை அந்த விஷயத்தை கண்டுகொள்ளவே மாட்டோம். அதில் கண்களும் ஒன்று. அதேபோல் கண்களைப் பாதிக்கும் சில விஷயங்களை அன்றாடம் நாம் செய்து வருவதும் இன்று அதிகரித்துவிட்டது. அதனால்தான் பலரும் இளமையிலிருந்தே கண் பிரச்னையால் கண்ணாடி அணிகின்றனர். இது இப்படியே சென்றால் பிறக்கும் குழந்தை கூட கவச குண்டலம் போல் கண்ணாடியோடே பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சரி அப்படி என்னென்ன தவறுகளை செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்.

லென்ஸ் அணிகின்றவர்கள் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் லென்ஸ் அணிந்தபடியே முகம் கழுவுவார்கள். அவ்வாறு செய்வது கண்களுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும். அவை கிருமிகளை எளிதில் தொற்றிக் கொண்டு கண்களைப் பாதிக்கும். அதோடு தண்ணீரால் சில சமயம் கண்களிலேயே லென்ஸ் உடையும். எனவே இனியும் அப்படி செய்யாமல் சிரமம் பாராமல் லென்ஸுகளை எடுத்துவிட்டு முகம் கழுவுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கம் நுரையீரலை மட்டும் பாதிப்பதில்லை. நுரையீரலோடு தொடர்புடைய கண்களையும் பாதிக்கிறது. இதுகுறித்த பல ஆய்வுத் தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் மக்கள் அக்கறை கொள்வதில்லை. புகைப்பிடித்தல் கண்புரையை உண்டாக்கி , தசைச் சிதவை ஏற்படுத்துகிறது. இதனால் பார்வை கோளாறு உண்டாக்கும். அதோடு ரெட்டினாவையும் பாதிக்கும். இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இது புகைப்பிடிப்பவருக்கு மட்டுமல்ல. புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்போருக்கும் இந்த பிரச்னை வரும். முக்கியமாக தொடர் புகைப்பழக்கம் 40 ஐக் கடந்தாலே கண்பார்வை மங்கி பார்வை இழப்பு உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

பெண்கள் ஐ மேக்அப் இல்லாமல் வெளியே வருவதே இல்லை. குறைந்தபட்சம் கண்களில் மையாவது வைத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் கண்களுக்கு அடர் கெமிக்கல் நிறைந்த பொருட்களால் கண்களுக்கு அழகு செய்வது கண்களைப் பாதிக்கும். குறிப்பாக இந்த கெமிக்கல்கள் நமக்கே தெரியாமல் கண்ணில் சுரக்கும் நீரோடு கலந்து அவை தூய்மையற்ற நீராக கண்களில் தேங்கி நிற்கின்றன. அவை கண்களுக்கு சற்றும் ஒத்துக்கொள்ளாத பலவகையான அமிலங்களை வெளியிடுகின்றன. மேலும் அது காலாவதியான பொருட்களாக இருந்தால் நிலைமை இன்னும் மோசம். எனவே இவை தூசு, அழுக்குகளைக் காட்டிலும் கண்களுக்கு அதிக பாதிப்பை உண்டக்குபவை என்பதை மறவாதீர்கள்.

வெளியில் வரும்போது நேரடி சூரிய வெளிச்சம் கண் பார்வையை மங்கச்செய்யும். அதோடு காற்றில் கலக்கும் தூசிகளும் கண்களை உறுத்துவதோடு பாதிப்பை உண்டாக்கும். எனவே கருவிழியைப் பாதுகாக்க சிறந்த தீர்வு சன் கிளாஸ். சன்கிளாஸ் இல்லாமல் வெளியே வருவதைத் தவிருங்கள். பையில் வைத்திருந்தாலும் போடுவதற்கு சிரமப்படாதீர்கள்.

டிஜிட்டல் பெருக்கத்தால்தான் இன்று இளமையிலேயே கண்ணாடி அணியும் பிரச்னை அதிகரித்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் கணினி, லேப்டாப், இது போதாதென்று இடைவேளையில்லா செல்ஃபோன் பயன்பாடு, அப்படியே வைத்தாலும் டி.வி , வீடியோ கேம் என எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் திரைகளிலிருந்து தப்பவே முடியாது. இது பயன்படுத்தாமல் ஒதுக்குவது சாத்தியமில்லை என்றாலும், கண்களின் ஆரோக்கியம் கருதி விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். முடிந்தவரை இந்த டிஜிட்டல் திரை பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனக்கட்டுப்பாடு மட்டுமே இதற்கு தீர்வு.