85 ஆண்டுகளுக்கு பின் சாதித்த இந்திய கிரிக்கெட் அணி

இந்தியாவில் பலவித விளையாட்டு போட்டிகள் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிக்கு என தனிரசிகர் பட்டாளம் உள்ளது. கிரிக்கெட் போட்டி நடந்தால் கண் இமை மூடாமல் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களும் இந்தியாவில் உள்ளனர். டிவி வசதி இல்லாத காலத்திலும், ரேடியோவில் கூறும் கிரிக்கெட் ஸ்கோர் விபரங்களை கேட்பதற்காக காத்திருந்த ரசிகர்கள் இருந்துள்ளனர்.

கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா இளவரசர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சவுரவ் கங்குலி, தடுப்பு சுவர் ராகுல் டிராவிட், ஒரே இன்னிங்சில் பத்து விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த அனில் கும்ப்ளே, உலக கோப்பை வென்று தந்த நாயகர்கள் ஆல் ரவுண்டர் கபில்தேவ், ராஞ்சி பாய் எம்.எஸ்.தோனி, இரண்டாம் சச்சின் எனப்படும் விராட்கோலி வரை பல கேப்டன்கள் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி சென்றுள்ளனர். வழி நடத்தி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1932ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. துவக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, ஜாம்பவான் வீரர்களின் வரவுக்கு பின்னர் மீண்டெழுந்து வெற்றிகளை குவிக்கத் தொடங்கியது. இந்திய மண்ணிலும், வெளிநாடு மண்ணிலும் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஒரு சாதனையை தவிர. இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடு மண்ணில் பல தொடர்களை வென்றாலும், ஒரு தொடரின் அனைத்து போட்டிகளையும் வென்றது கிடையாது.

85 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிநாட்டு மண்ணில் ஒரு தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றி சமீபத்தில் சாதனை படைத்துள்ளது. விராத்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. டெஸ்ட் ஜாம்பவான்கள் எனப்படும் ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், சச்சின் டெண்டுல்கள், சவுரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி, அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் இல்லாமல் இந்த சாதனையை படைத்துள்ளது கோலி அன்ட் கோ.

3 டெஸ்ட், 5 ஒருநாள், 1 இருபது ஓவர் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் இலங்கை சென்றது. முதல் கட்டமாக டெஸ்ட் தொடர் முடிவடைந்தது. கடந்த ஜூலை 26ல் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, கடந்த 3ம் தேதி நடந்த 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்யாசத்திலும், கடந்த 12ம் தேதி நடந்த 3வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளையும் வென்று 3&0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இலங்கையை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய கிரிக்கெட் அணி. பேட்டிங்கில் சிகார் தவான், சத்தீஸ்வர் புஜாரா, ரகானே, விராத் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அசத்த, பவுலிங்கில் முகமது சமி, உமேஷ்யாதவ் ஆகியோர் போட்டுத்தாக்கினர். ஆல் ரவுண்டர் களாக சுழல் மன்னர்கள் தமிழகத்தின் அஸ்வின், ரவீந்திரஜடேஜா, வேகப்புயல் பாண்டயா ஆகியோர் அசத்தினர். தொடர் நாயகன் விருதை சிகார் தவான் கைப்பற்றினார்.

அனுபவம் மற்றும் இளம் வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ச்சியாக (2015&2017 வரை) வென்ற 8வது தொடர் இது. சிறப்பான செயல்பாட்டால் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் இடத்தை இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. தொடர் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் இங்கிலாந்துடன் (8 தொடர்/1884&1890) 2ம் இடத்தை பகிர்ந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 9 தொடர் வெற்றிகளை பெற்று முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா (2005&2008) அணியை நோக்கி வேகமாக சென்று வருகிறது.

85 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நிய மண்ணில் தொடரின் எல்லா போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியை முன்னாள், இன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள், வீரர்கள் வாழ்த்தி வருகின்றனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இதே சிறப்பான பார்ம் தொடரும் பட்சத்தில் 9 தொடர் வெற்றியை பெற்று ஆஸ்திரேலியாவுடன் முதல் இடத்தையும் பகிர்ந்து கொண்டு, பின்னர் 10 தொடர் வெற்றியை பெற்று தொடர் வெற்றி பெற்ற அணிகளில் விரைவில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது நிருபர்