சேவை அல்ல, கடமை…

பொதுவாக, படிப்பை முடித்தால் போதும், கல்லூரிக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றுபலர் இருக்கின்றனர். ஆனால் நாம் படித்த கல்லூரிக்கு நம்மால் முடிந்த உதவிகளும், ஊக்குவிப்பும் கொடுக்க வேண்டும் என்ற நல்லுள்ளத்துடனும் பல முன்னாள் மாணவர்கள் உள்ளனர்.  அந்த வகையில், 164 வருடம் பழைமை வாய்ந்த கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சிலர்  இணைந்து பல சேவைகள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அறிய அவர்களைத் தொடர்பு கொண்டபோது, முன்னாள் மாணவர்கள் சங்க துணைத் தலைவர் முரளிதரன் நம்முடன் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள், வாசகர்களுக்காக…

முன்னாள் மாணவர்கள் சங்கம் செய்து வரும் சேவைகள்?

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்  கொண்டு இயங்கும் இச்சங்கத்தின்  மூலம், கோவை அரசுகலைக் கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். உதாரணமாக, இக்கல்லூரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கான  கழிப்பறை வசதி,  குடிநீர் வசதி, கலையரங்கம் போன்ற அடிப்படை வசதிகளை சீர் செய்து கொடுத்துள்ளோம்.

அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்திருக்கும், நீங்கள் செய்ய காரணம்?

சமீபகாலத்தில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கான செயல் முறைகளை அரசாங்கம் செயல்படுத்த பல நாட்கள் தேவைப்படும். அது வரையிலும் இங்கு படிக்கும் மாணவர்கள் நிலையை எண்ணி நாங்கள் இந்த முயற்சியில் இறங்கினோம். மேலும் இங்கு படிக்கும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளைச்  சேர்ந்த மாணவர்களைக் கொண்டும்  அடிப்படை வசதிகளை சீர் செய்துள்ளோம்.

எதிர்கால சேவைகள் குறித்து?

நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறோம். சரியான தருணத்தில் அவற்றை செயல்படுத்துவோம். அதில் ஒரு சில திட்டங்களை இங்கே கூற விரும்புகிறேன். இப்பொழுது  உள்ள கழிப்பறைகளை விரிவுபடுத்திடவும், குடிநீர் வசதியை மேம்படுத்திடவும், ஆடிடோரியம் அமைத்துக் கொடுக்கவும், நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் இனி வரும் ஆண்டுதோறும் சிறந்த முன்னாள் மாணவர்கள் விருதும் வழங்க உள்ளோம். மேலும், வருகின்ற செப்டம்பர் 10 முன்னாள் மாணவர்கள் தினத்தைக் கொண்டாட உள்ளோம்.

இதற்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள்?

அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி, பல முறை நாங்கள் அரசிடம் கொடுத்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். மேலும், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக எங்கள் கடமைகளை நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம். தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் படிப்பு சார்ந்த பல உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். அத்துடன் என்.சி.சி., என்.எஸ்.எஸ் மாணவர்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பும் தருகின்றனர்.

மேகலா நடராஜ்