ஒரு நாள் தலைமை ஆசிரியராக பள்ளியைக் கலக்கிய மாணவி…!

ஒரு நாள் முதல்வர் பாணியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பள்ளியைக் கலக்கிய மாணவி…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனுர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 75 மாணவ, மாணவிகளும், 7 ஆசிரியர்களும் உள்ளனர். இப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐம்பெரும் விழா நடந்தது.

பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்விச் சீராக, மிளகனுர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக வந்து வழங்கினார். பள்ளி வளாகத்தை சோலையாக்கும் வண்ணம் தென்னை மரக் கன்றுகள் நடப்பட்டன.

விழாவில் மாணவர்களுக்கு ஷு வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்களுக்காக சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண்களை கவுரவிக்கும் வண்ணம் பள்ளியில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வருகைப் பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செயதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய 10ம் வகுப்பு மாணவி காவ்யாவை ஒரு நாள் தலைமையாசிரியராக நியமித்து நேற்று முழுவதும் அவருடைய வழிகாட்டுதல் படி பள்ளி செயல்பட்டது.

பள்ளிக்கு வந்த காவ்யாவை தலைமையாசிரியர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட சக ஆசிரியர்கள் வரவேற்று தலைமையாசிரியர் நாற்காலியில் அமரவைத்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

தலைமையாசிரியரின் பணி குறித்து விநாயக மூர்த்தி எடுத்துகூறினார். அதன்பின் ஆசிரியர்களுடன் மாணவ, மாணவியர்களின் கல்வி குறித்து காவ்யா ஆலோசனை நடத்தினர். பாடங்கள் கற்பிக்கும் விதம், மாணவ, மாணவியர்கள் ஆர்வமாக பாடங்களை கவனிக்கின்றனரா?உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.பின் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற காவ்யா ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பாடங்கள் கற்பிக்கும் திறன் குறித்து ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்கள் விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார். அரசு பள்ளி மாணவியை ஒரு நாள் தலைமையாசிரியராக நியமித்த விஷயம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Source : News 18 Tamil