விதை ஏற்றுமதிக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள்

“சர்வதேச விதை ஏற்றுமதிக்கு, கோவை விதை பரிசோதனை நிலையத்தால் வழங்கப்படும் விதைத் தரச்சான்றிதழை பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று கோவை விதை பரிசோதனை அலுவலர் கணேசன் கூறினார்.

இந்தியாவிலேயே  அரசு சார்ந்த கோவை விதை பரிசோதனை நிலையம் ஒன்று தான் “இஸ்டா” சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்கு சர்வதேச நடைமுறைகளின்படி, விதை பரிசோதனை மேற்கொள்ள பரிசோதனை செய்து வழங்கப்படும் சான்றிதழ்களை உள்நாடு மட்டுமின்றி சர்வதேச விதை வர்த்தகத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு அங்கீகாரத்தால், ஏற்றுமதி விதைகளுக்கான ஆரஞ்சு மற்றும் நீல வண்ண சர்வதேச விதை மாதிரி சான்றிதழ் வழங்கப்படும்.  ஆரஞ்சு வண்ண சர்வதேச விதை குவியல் சான்றிதழ் ரூ.4000/-ம், நீல வண்ண சர்வதேச விதை மாதிரி சான்றிதழ் ரூ.2000/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தனியார் விதை விற்பனை நிறுவனங்கள், தனியார் விதை உற்பத்தியாளர்கள் மாதிரிகளை கொடுத்து விதை தரச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.  OIC சான்றிதழ் வேண்டுமென்றால் ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டுள்ள விதை குவியல்களில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும். விதை பரிசோதனை நிலைய அலுவலர்கள் மாதிரிகள் சேகரித்து,  அதனை விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து, முடிவுகளை சான்றிதழில் ஏற்றப்பட்டு ஆரஞ்சு சர்வதேச விதை குவியல் சான்றிதழ் வழங்கப்படும்.  சான்றிதழ் பெறப்பட்ட விதைக் குவியல்கள் உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதிக்கு தகுதி வாய்ந்ததாக கருதப்படும். BIC சான்றிதழ் பெறுவதற்கு, விதை மாதிரிகளை தாங்களாகவே சேகரித்து, விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து முடிவுகளை நீல வண்ண சர்வதேச விதை மாதிரி சான்றிதழாக பெற்று வணிகம் செய்யலாம்.

கடந்த டிசம்பர் மாதம், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தணிக்கை குழுவினர் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து சர்வதேச விதை வணிகத்தில் இந்தியாவின் மூலம் பங்கினை அதிகரிக்க எத்தகைய வாய்ப்புகள் உள்ளன என்பதைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்பொழுது விதை பரிசோதனை நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர். எனவே வரும் காலங்களில் தரமான விதைகளை ஏற்றுமதி செய்யும்போது கோவை விதைப்பரிசோதனை நிலையத்தில் வழங்கப்படும் ஆரஞ்சு மற்றும் நீல வண்ண சான்றிதழ்கள் பெறும் பங்கு வகிக்கும் என கூறினார். மேலும் விபரங்கள் அறிய, விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், 1424ஏ, தடாகம் ரோடு, கோவை என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி எண் 0422-2981530