புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்

– ஒரு நாள் அறிமுக பயிற்சி முகாமில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி முகாமை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் அறிமுக பயிற்சி முகாமினை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், கஸ்தூரி வாசு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்திமதி, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் அமுல்கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட அலுவலர் செல்வராசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாதேவி, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள்  செயலாக்கத்துறை அமைச்சர் பேசுகையில்,

கிராம ஊராட்சி என்பது மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் சிறந்த ஒன்றாக விளங்குவதுடன், மக்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பில் உள்ள அமைப்பாக விளங்குகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை வசதிகள் போன்றவற்றை குறைபாடின்றி வழங்க வேண்டிய பொறுப்பினை ஏற்று செயல்படும் அமைப்பாக கிராம ஊராட்சி உள்ளது.

கிராம ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய நிதி, ஒப்படைக்கப்பட்ட வருவாய், மத்திய நிதி ஆணைய நிதி மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் நிதி என பல வகைகளில் நிதியினை தமிழக அரசு வழங்கி வருகிறது. கிராம ஊராட்சிகள் மூலமாக பல்வேறு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன்,  அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டுதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுதல், தூய்மை கிராம இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கு கழிப்பறை கட்டுதல் போன்ற திட்டங்களை கிராம ஊராட்சிகள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், நாட்டிலேயே சிறந்த முறையில் அதிக அளவிலான நிதி ஓதுக்கீடு பெற்று தமிழ்நாட்டில் செயல்டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமும் கிராம ஊராட்சிகள் மூலமே செல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் செயல்படுதைப் பாராட்டி மத்திய அரசு தொடர்ந்து விருதுகளை தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது எனவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர்கள் மற்றும் துணைத்லைவர்கள் மக்களுக்கான தேவைகளை சிறந்த முறையில் வழங்கிட முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தல் மற்றும் சுத்தமான கிராமம் ஆகிவற்றில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஊராட்சிக்கான  வருவாயாக விளங்கும் வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை முறையாக வசூலித்து நிதியினை பெருக்கிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊராட்சிகளுக்கான சட்ட திட்டங்களையும், அரசாணைகளையும் இப்பயிற்சி முகாமில் முறையாக தெரிந்துகொண்டு சிறப்பான நிர்வாகத்தினை தருவதற்கு முழுமையாக  ஈடுபாட்டுடனும் பணியாற்றவேண்டும்  என்று கூறினார்.