‘‘கைத்தறிக்கு கை கொடுப்போம்’’

உலகத்தின் மிகப் பழைமையான தொழில் எதுவென்றால் உழவுத்தொழில் என்று எல்லோரும் சொல்வார்கள். அதற்கு அடுத்த தொழில் என்றால் நெசவுத்தொழில் என்றுதான் கூற வேண்டும். இலைகளையும், தழைகளையும் உடுத்தியிருந்த மனிதர்கள் ஆடையை நெய்து உடுத்தியபோதுதான் முழு நாகர¤கம் பெற்றான் என்று சொல்ல முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் விற்கப்பட்ட பண்டங்களில் ஒன்றாக இந்த ஆடை வகைகள் இருந்தததை வரலாறு கூறுகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரை உழவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக இந்த நெசவுத்தொழில் இருந்து வருகிறது. இந்திய நாடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நெசவுத்தொழிலில் பல நுட்பங்களை புகுத்தி, உற்பத்தியில் தலைசிறந்து விளங்கியது. உள்நாட்டு விற்பனைபோக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

பருத்தி நெசவு, பட்டு நெசவு, கம்பளி நெசவு என எல்லா வகை நெசவு முறைகளும் இந்திய நாட்டில் நன்கு நிலை பெற்று இருந்தன. இந்தியா என்பது ஒரு பரந்த நிலப்பரப்பு என்பதால் நாட்டின்  ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப பல வகையான நெசவு முறைகள், ஆடை வடிவமைப்புகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

பிரிட்டிஷ்காரர்கள் தொடங்கி பல்வேறு வெளிநாட்டு வணிகர்களும் இங்கு வருகை தந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இங்கு நெய்யப்பட்ட கைத்தறி ஆடை வகைகளே. இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரைகளில் இந்த கைத்தறி ஆடைகள் முக்கிய ஏற்றுமதிப்பொருளாக விளங்கி வந்தது.

ஆனால் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி இந்தியாவின் கைத்தறித்தொழிலை தலைகீழாக புரட்டிப்போட்டது. நவீன நெசவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பஞ்சாலைகள் நவீன மயமாக்கப்பட்டன. இதனால் இலட்சக்கணக்கான கைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்த தால், அவர்களின் வாழ்வா தாரம் அழிக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல பஞ்சாலைகள் தொடங்கப்பட்ட அதே நேரத்தில் பல ஆயிரம் கைத்தறிகள் செயலிழந்து போயின. இந்த சமயத்தில்தான் மகாத்மா காந்தி இராட்டை எனும் ஆயுதத்தை கையில் எடுத்து கதரை ஆதரிக்கத் தொடங்கினார். இதையடுத்து கைத்தறி மீண்டும் உயிர் பெறத் தொடங்கியது.

தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக கைத்தறித்தொழில் சிறப்பாக நடந்து வந்தது. காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி, சின்னாளப் பட்டி, மதுரை, சத்தியமங்கலம், பவானி, கோவை என்று பல பகுதிகளில் கைத்தறி நெசவு கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. சுதந்திரப்போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் கூட கோயம்புத்தூர் பகுதிகளில் கைத்தறி நெசவு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டி ருந்தது. கோவை காட்டன் துணி வகைகள் வடஇந்தியா வரை கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வந்தன.

கோயம்புத்தூரில் பஞ்சாலை கள் செழித்து வளர்ந்த அதே நேரத்தில், கைத்தறித்தொழிலும் நன்கு நடந்து வந்தது. ஆனால் விசைத்தறியும் வந்த பிறகு கைத்தறித் தொழிலை ஆதரிப்பவர் யாரும் இல்லாமல் தடுமாறத் தொடங்கியது. அரசாங்கத்தின் ஆதரவு இருந்தாலும் மக்களின் ஆதரவு குறைந்தததால் கைத்தறித் தொழில் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

இன்றைய காலகட்டத்தில் அதை மீட்டெடுக்கும் முயற்சியாக கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை முன்னின்று நடத்தியவர், கோவை மக்கள் சேவை மைய நிறுவனர் மற்றும் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆவார். இதை மத்திய அரசின் கைத்தறி நல வாரியம் மற்றும் டிரீம் சோன் ஆகியன இணைந்து நடத்தின. வளரும் தலை முறையினரிடம் கைத்தறி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அதன் சிறப்புகளை வானதி சீனிவாசன் எடுத்துரைத்து பேசுகையில், காலத்துக்கேற்ற மாற்றங்களை கைத்தறித் துறையில் செய்ய வேண்டிய அவசியம். கைத்தறி ஆடை என்பது ஒரு தொழில் என் பதையும் தாண்டி, அத்தொழில் சார்ந்த மக்களின் பொருளாதார, பண்பாட்டு முக்கியத்துவத்தையும் காட்டும் ஒரு குறியீடாகும். குஜராத்தில் நெய்யப்படும் கைத்தறித்துணியில் மழைத்துளி போன்ற வடிவத்தில் டிசைன் இருப்பது, அங்கே தேவைப்படும் மழை நீரையும்; மதுரையில் நெய்யப்படும் கைத்தறி ஆடைகளில் கோபுரம் போன்ற டிசைன்கள் இங்குள்ள கோவில் கலைகளையும் எடுத்துக் காட்டுகின்றன. இதுபோலவே நமது நாடெங்கும் உள்ள பல்வேறு பகுதிகளின் கலாச்சாரமும் இந்த கைத்தறி ஆடைகளில் பதிந்து கிடக்கிறது. இதுபோன்ற விழாக்களை நடத்துவது என்பது வீழ்ந்து கிடக்கும் கைத்தறித் துறையினை எழ வைத்து உலக அளவில் அதனை தலைநிமிர வைக்கும் முயற்சிகளில் ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விழாவில் சுமார் இரண்டாயிரம் மாணவிகள் கலந்து கொண்டனர். அவர் களுக்கு கைத் தறியின் முக்கியத்துவத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக இந்த விழா நடத்தப்பட்டது. விழா வின் ஒரு பகுதியாக ‘கைத்தறி ஆடை பேஷன் ஷோ’ நடத்தப்பட்டது. இதில், ‘கைத்தறி மகாராணி’யாக கோவை கிருஷ்ணா கல்லூரி மாணவி மேத்தா ரகுநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.