என்.ஜி.பி பள்ளி ஆண்டுவிழா

கோவை காளப்பட்டியில் உள்ள என்.ஜி.பி பள்ளியில் ஏழாவது ஆண்டு விழா ‘மாற்றத்தின் சிறகுகள் 2019’ நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். அத்துடன் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். கோவை மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி விழாவிற்குத் தலைமையேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். மேலும், பள்ளியின் தாளாளர் டாக்டர் தவமணி பழனிசாமி இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் பிரீத்தா பிரகாஷ் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

மாற்றத்தின் சிறகுகள் என்ற தலைப்பை விளக்கும் வகையில் பல்வேறு நடனங்களை மாணவர்கள் அழகாக நிகழ்த்திக் காட்டினர். மேலும் பெண்களின் ஆளுமையை விளக்கும் ‘சிலப்பதிகாரம்’ என்ற நாட்டிய நாடகமும், இணையத்திற்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் ‘சைபர் அடிக்ஷன்’ என்ற நாடகமும் பார்வையாளர்களின் கண்களையும் கருத்துகளையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.

மேலும் இவ்விழாவில் கோவை மருத்துவ மையத்தின் அறங்காவலர் டாக்டர் அருண் பழனிசாமி, என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட இயக்குநர் மதுரா பழனிசாமி, என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன், தலைமை நிர்வாக அதிகாரி நடேசன், பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதிகா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். என்.ஜி.பி பள்ளியின் மாணவர் பிரதிநிதிகள் பிரண்டன் மற்றும் நிகிதா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். துணை மாணவர் பிரதிநிதி ஐசக்ஆபிரகாம் நன்றி நவின்றார்.