50 ரூபாய் செலுத்தினால் ஏடிஎம் கார்டு! வங்கிகளுக்குப் போட்டியாகக் களம் இறங்கியது தபால் நிலையங்கள்!

 

இந்தியத் தபால் நிலையங்களில், 50 ரூபாய் செலுத்தி புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியைத் தபால்துறை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மற்றும் தேசிய வங்கிகளின் சேவைக் கட்டணங்கள், வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளன. மேலும், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க, குறைந்தபட்ச இருப்புத் தொகையை ஒரு சில வங்கிகள் உயர்த்தி வருகின்றன. குறைந்தபட்ச இருப்புத்தொகை வைதிருகவில்லை என்றால் அடுத்தமுறை சேமிப்புக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யும்போது, கூடுதல் கட்டணம் வசூல் செய்துவிடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால், தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, குறைந்த தொகையில் வங்கிச் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளன இந்தியத் தபால் நிலையங்கள். அதன்படி, 50 ரூபாய் செலுத்தி, புதிய வங்கிக் கணக்கைத் தொடங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளன.

தபால் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில் 50 ரூபாய் செலுத்தி,  புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்குபவர்களுக்கும் ஏடிஎம் கார்டு வழங்கபடுகிறது. இந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அஞ்சலங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம்.  பிற வங்கி ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்கலாம். இதற்கு எவ்வித சர்வீஸ் கட்டணமும் (Transaction Fees) கிடையாது என்பது கூடுதல் சிறப்பு. மேலும், தபால் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் வைத்திருந்தால், காசோலைப் புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்!