தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது!

இந்த ஆண்டு கோடைகாலத்தில் இதுவரை நாம் கண்டிராத அளவிற்கு வறட்சியை சந்தித்தோம். இந்த வறட்சி தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருந்தது. இந்த வறட்சி என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது அனைவரும் அறிந்தது தான். இதில் ஒரு முக்கிய தேவையாக இருக்ககூடிய நிலத்தடி நீரும் பார்வைக்கு எட்டாத தூரத்திற்கு சென்று விட்டது. இது தமிழக மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியது. கோடை காலம் எப்படியோ கனவாய் மறைந்து விட்டது. ஆனால், இன்னும் சில மாதங்களில் அந்த கனவு வரவுள்ளது. ஆனால், அதனை சரிசெய்யும் விதமாக, மனதை ஆறுதல் படுத்தும் தகவலாக பொதுப்பணி துறையின் சார்பில் ஒரு செய்தி வந்துள்ளது.

சென்னையின் பல இடங்களில் கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. சென்னையின் பல இடங்களில் கடந்த அக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் நடத்திய ஆய்வில் கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது கடந்தாண்டை காட்டிலும் 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு கோடை காலத்தில் சென்னை சந்தித்த தண்ணீர் பஞ்சத்திற்கு பிறகு, மழைநீர் சேமிப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக கடந்த சில மாதங்களாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.