மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம்

ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெற்ற பள்ளி விளையாட்டு இந்திய கூட்டமைப்பின் 65வது தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டி தகுதி தேர்வில் ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவிகள் மைதிலி, தர்ஷினி மற்றும் பூஜாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பிடித்து வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இது குறித்து ஏசியன் கராத்தே கூட்டமைப்பின்  நடுவர் அறிவழகன் பேசுகையில், ஸ்ரீ ஜெயேந்திர மெட்ரிக் பள்ளியில் 10 வருடமாக பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறேன். பயிற்சி பெற்ற மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் தொடர்ந்து ஒன்பது வருடங்களாக சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் எங்கள் பள்ளியில் இருந்து மூன்று மாணவர்கள்  வெண்கலம் பதக்கம் வென்றனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில அளவிலான 65ஆவது பள்ளி விளையாட்டு இந்திய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற கராத்தே தகுதி போட்டியில் ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவி மைதிலி அண்டர் (17) -56 எடைப்பிரிவில் முதலிடமும், தர்ஷினி அண்டர் (17) -64 எடைப்பிரிவில் முதலிடமும், பூஜாஸ்ரீ அண்டர் (14) +50 எடைப்பிரிவில் முதலிடமும் பெற்றனர். இவர்கள் வரும் டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டின் சார்பில் இந்த மாணவிகள் கலந்துகொண்டு பெருமை சேர்க்க உள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளனர் என்றார்.

இவர்களை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி தாளாளர் தனலட்சுமி ஜெயச்சந்திரன் பாராட்டினார். இவரோடு பள்ளி முதல்வர் கீதா சுதர்சன், ஏசியன் கராத்தே கூட்டமைப்பின்  நடுவர் அறிவழகன், பயிற்சியாளர் நஸுருதீன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரும் பாராட்டினர்.