கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கோவை கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் இணைந்து, திருப்பூரில் “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் 10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை நடத்தியது. இந்நிகழ்வில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மு.அகிலா திருப்பூருக்கும் கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பையும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பற்றியும் தேர்விற்கான எளிய வழிமுறைகளையும் விளக்கி வரவேற்புரை ஆற்றினார்.

விழாவிற்குத் தலைமையுரை வழங்கிய கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் முதன்மை அலுவலர் யு.ஆ. நடராஜன் மாணவர்களுக்கான தன்னம்பிக்கைக் கருத்துக்களைக் கூறினார். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த சிந்தனைக்கவிஞர் கவிதாசன், “நீங்களும் சாதிக்கலாம்” என்ற தலைப்பில், ‘மாணவர்கள் தங்கள் சிந்தனைகளைச் செம்மைப்படுத்திச் சாதனை செய்யவேண்டும். வாய்ப்புகள் உன்னைத்தேடி வந்தால் நீ அதிரஸ்டசாலி, வாய்ப்புகளைத் தேடி நீ சென்றால் புத்திசாலி, வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லையென்றால் நீ ஏமாளி, வாய்ப்புகளே இல்லையென்று ஏங்கிக்கொண்டிருந்தால் நீ கோமாளி. மூச்சு விடுபவனெல்லாம் மனிதனல்ல. முயற்சி செய்பவனே மனிதன். மாணவர்கள் 1.ஒழுக்கம், 2.துணிச்சல், 3.முயற்சி, 4.தன்னம்பிக்கை, 5.தனித்தன்மை. என்ற இந்த 5 பண்புகளை வளர்த்துக் கொண்டால் சிப்பிக்குள் இருக்கும் முத்தைப்போல் விலைமதிப்பற்றதாக மாறிவிடுவர். கடின உழைப்பே என்றும் வாழ்க்கையில் வெற்றியைத் தரும். தன்னம்பிக்கையே கடின உழைப்பிற்கு ஆதாரமாகும். ஆகவே தன்னம்பிக்கையோடு கூடிய கடின உழைப்பிற்கு மாணவர்கள் தயாராக வேண்டும்’ என்றார். ‘விடியல் என்பது வெளியில் இல்லை. உன் விழியில் உள்ளது’ என்றும், மாணவர்கள் தங்கள் பாடங்களை விருப்பத்துடன் படிக்கும்போது மட்டுமே நினைவில் வைத்துத் தேர்வை நல்ல முறையில் எழுத முடியும் என்றும் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த மனநல நிபுணர் டாக்டர்.விஜயகுமார், “மிக அதிவேக கற்கும் திறன்” என்ற தலைப்பில், ‘ஞாபக மறதி என்பது ஒரு பிரச்சினை அல்ல. உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருவதில் தான் பிரச்சினை உள்ளது. நமது மூளை 1 நிமிடத்திற்கு 2000 வார்த்தைகளைக் பார்க்கும். 250 வார்த்தைகளை கேட்கும்.  அவ்வாறு கேட்கும் வார்த்தைகள் மூளைக்கும், கவனிக்கும் வார்த்தைகள் மனதிற்கும் சென்றடையும். பயனுள்ள வகுப்பு அறை – ல் மாணவர்கள் கேட்கும்போது தெரிந்து கொள்ள மட்டுமே முடியும். கவனிக்கும்போது மட்டுமே 5மூ – ஐ நினைவில் வைத்துக்கொள்ள முடியும். ஆகவே பகுப்பாய்வு சிந்தனை  என்பது மாணவர்களுக்கு மிக முக்கியம். தெரிந்து செய்தால் வேலை, புரிந்து செய்தால் செயல்திறன். விரும்பிச் செய்யும் எந்த வேலையும் வெற்றியடையும். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் அன்பு அதிகரிக்கும்போது அனைத்தையுமே சாதிக்கலாம். சரியான தூக்கமும், உணவும் உடலுக்குத் தேவையான வலிமையைத் தரும். இவ்வலிமையோடு சேர்ந்து தன்மை, எளிமை, பொறுமை ஆகியவை மாணவர்களுக்கு வாழ்வில் வெற்றியைத் தரும். நம் மனதையும் ஆழ்மனதையும் ஒன்று சேர்த்தால் வெற்றி நிச்சயம். ஆழ்மனதிற்குச் சரியான கட்டளையை அனுப்பும்போது ஆழ்மனதும் மனதும் ஒன்றாக இணைகிறது. அவ்வாறு இணைவதே ஞாபகத்திறனை வலுப்படுத்தும்’ என்றார். ஆழ்மனதையும் மனதையும் ஒன்றாக இணைக்கும் பயிற்சியைச் செய்து காண்பித்து மாணவர்களை பயிற்சியில் ஈடுபடுத்தினார். பாடங்களை மிக வேகமாகக் கற்பது எவ்வாறு என்றும், கற்கும்போது மாணவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவைகள் பற்றியும் விரிவாகக் கூறினார். இப்பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அறிந்த மாணவர்கள் பயிற்சிகளில் மிக ஆர்வமாக ஈடுபட்டனார். மேலும் கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் பணியாற்றும் 15 மிகச்சிறந்த ஆசிரியர்களுக்கு பணியைப் பாராட்டி, ”சிறந்த ஆசிரியர் – 2019” என்னும் விருதினை வழங்கியும் சிறப்பித்தது.

விழாவின் நிறைவாக கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் முதல்வர் பாலுசாமி, உலகளாவிய அளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யக்கூடிய தொழிலதிபர்கள் திருப்புரில் மட்டுமே அதிகமாக உள்ளனர் என்ற திருப்பூரின் பெருமையைக் கூறினார். மேலும் மாணவர்களின் பொதுத்தேர்விற்கான எளிய வழிமுறைகளையும் மதிப்பெண்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறி, விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவுரை ஆற்றினார். இந்நிகழ்வில் 15 – க்கும் மேற்பட்ட பள்ளிகளும்  சுமார் 2000 – க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.