மனிதக்கழிவுகளை அகற்றும் புதிய எந்திரம்

தொழில் அனைவருக்கும் தெய்வம் போல தான். இருந்தாலும் ஒருசிலரின் வேலை நரகம் போன்று கொடுமையாது. இதில் முக்கிய இடம் பெரும் தொழில் சாக்கடையும், மனித கழிவுகளையும் சுத்தம் செய்யும் தொழில். இதை போன்ற ஒரு கொடுமையான தொழில் இருக்குமென்றால் எனக்கு தெரிந்தவரை இல்லை. எத்தனையோ துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்தாலும், மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது என்ற கொடுமைக்கு இதுவரை விடிவே இல்லாமல் தான் இருந்தது. ஆனால், இப்பொழுது அதற்கு ஒரு எந்திரம் கோவைக்கு வந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக முதன் முதலாக ரோபோட் எந்திரத்தின் செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சலிவன் வீதி, மாநகராட்சி மாரண்ண கவுடர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

இதில் மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுவதற்கு மாற்றாக கோவையில் முதன் முதலாக பாதாளசாக்கடை கழிவுகள் அகற்றும் ரோபோட் எந்திரம் மாநகராட்சியின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எச்பிசிஎல் நிறுவனம் ரூ.36.00 இலட்சம் மதிப்பிலான ரோபோட் எந்திரத்தினை அமைச்சர் முன்னிலையில் மாநகராட்சிக்கு ஒப்படைத்தார்கள். இந்த எந்திரத்தின் செயல்பாட்டினை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

மேலும், மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கும் 5 எண்ணிக்கையிலான கொசுப்புழு ஒழிப்பான் இயந்திரங்களின் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகரப் பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்அரசன், மேற்கு மண்லட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், கோவை எச்பிசிஎல் துணை பொது மேலாளர்  தாமோதரன், ஜென்ரோபோடிக் நிறுவன இணை நிறுவனர் ரஷித், மாநில ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.