‘ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ‘ஒரு பூ பூத்ததா’

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் கண்மணியே கதை கேளு

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் குழந்தைகள் மனதில் நல்லதே விதைக்கும் முயற்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமையில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் ‘கண்மணியே கதை கேளு’ நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறு நவம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் கண்மணியே கதை கேளு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகச்சியில் பிரபலமான கதை சொல்லி அமுதா கார்த்திக் குழந்தைகளுக்கு பல கதைகள் கூறினார்.

நம் புராண, இதிகாச கதைகளின் வழியாக குழந்தைகளுக்குப் பிடித்தமான வீரதீர சம்பவங்கள் மட்டுமல்லாமல், அன்பு, கருணை, போன்றவற்றைக் குழந்தைகளுக்கு போதிக்க முடியும். மேலும், நம் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை சொல்லிக் கொடுக்கவும் முடியும். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தேவி என்ற பெண் தீபாவளியன்று தீபம் ஏற்றி மகாலட்சுமி அருள் கிடைத்ததன் மகிமை கதை கூறினார். வாழ்வின் எல்லா நேரங்களிலும் நமக்கு பொன்னும், பொருளும் வேண்டும் என்று மகாலட்சுமியை வேண்டுவதை விட, தினசரி வீட்டில் விளக்கேற்றி எப்பொழுதும் எங்கள் வீட்டிலும், மனதிலும் மகாலட்சுமி இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாலே அனைத்து செல்வங்களும் நமக்கு கிடைக்கும் என்று கதையின் வழியாக கூறினார் அமுதா கார்த்திக். தினசரி நம் பெரியவர்கள் மாலை விளக்கேற்றி வழிபடுவதற்கு காரணம் உண்டு. நம் வீட்டில் பெரியவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குள் இருக்கும் நேர்மறையான விஷயங்களை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கல்வி, செல்வம், வீரம் மூன்றும் ஒன்றினைய ஆணவத்தினை அழிக்க வேண்டும். லஷ்மி, சரஸ்வதி, பார்வதி மூவரும் இணைந்து வந்தவள் தான் துர்கை. ஆணவத்தினால் மக்களை துன்புறுத்தியவனே மகிஷாசுரன். அவனை அழித்ததன் நாளே நவராத்திரியாக கொண்டாடுகிறோம் என்று துர்க்கை மகிஷாசுரன் கதையினைக் கூறினார். மேலும் கந்த சஷ்டிப் பெருவிழாவின் மகிமை, முருகனின் சூரசம்ஹாரம் கதையையும் கூறினார். மற்றும் சின்ன சின்ன முருகா என்ற பாடலையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பாட வைத்தார்.

இன்றைய குழந்தைகள் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகள் பல உள்ளது. அந்தப் பாரம்பரிய விளையாட்டுக்களும் சொல்லிக் கொடுத்து இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். கொளை கொளையா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததா என்று குழந்தைகள் கூடி விளையாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் நூறு பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பங்கேற்றனர்.