கான்பூர் ஐஐடி, மேத்தா பேமிலி பவுண்டேஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கான்பூர் ஐஐடி கல்வி நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த மேத்தா பேமிலி பவுண்டேஷனுடன் இணைந்து, புதிய மருத்துவ பொறியியல் மையத்தை துவக்க முடிவு செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கான்பூர் ஐஐடி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் அபய் கரண்டிகர், மேத்தா பேமிலி பவுண்டேஷன் ராகுல் மேத்தா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். சான் டியாகோ, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சங்கர் சுப்ரமணியம், ‘மேத்தா குடும்ப மருத்துவ பொறியியல் மையத்தின்’ ஆலோசகராக செயல்படுகிறார்.

இதுகுறித்து பேராசிரியர் அபய் காரண்டிகர் பேசுகையில், ‘‘ மருத்துவ துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மேத்தா குடும்ப மருத்துவ பொறியியல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தையும் பொறியியல் துறையையும் இணைக்க வேண்டும் என்ற கான்பூர் ஐஐடியின் கனவை நிறைவேற்ற இது பெரிதும் உதவியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய மையம், மருத்துவ பொறியியல் துறையில், மனித வளத்தை உருவாக்கும் என்பது உறுதி. இந்த மையம், தனித்துவமிக்க, தரமான ஆராய்ச்சியை மேற்கொள்ளுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

மேத்தா பேமிலி பவுண்டேஷன் ராகுல் மேத்தா பேசுகையில், ‘‘பல்வேறு சாதனைகளுடன், அறிவியல் சார்ந்த பொறியியல் கல்வித் துறையில் முன்னோடியாக திகழும் கான்பூர் ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். 21 ம் நூற்றாண்டில் மருத்துவ துறையில் புதிய  தொழில்நுட்பத்தை வழங்குவதில் இது முன்னணியில் இருக்கும். இந்த கல்வி துறையில், இந்திய மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன், ஒவ்வொருவருக்கும் பொருளாதார வளத்தை உருவாக்க வேண்டும் என்பதே மேத்தா பேமிலி பவுண்டேஷனின் நோக்கம்,’’ என்றார்.

உயிரி அறிவியல் மற்றும் உயிரி பொறியியல் (உயிரி மருத்துவ ஆராய்ச்சி) பேராசிரியரும், சான் டியாகோ, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சங்கர் சுப்ரமணியம் பேசுகையில், ‘‘கான்பூர் ஐஐடி நிறுவனத்துக்கு மணிமகுடமாக இந்த மருத்துவ பொறியியல் மையம் விளங்குவதோடு, இந்த துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கும். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள், இந்திய சுகாதார துறையில் ஒரு  புரட்சியை உருவாக்க முடியும். மருத்துவத்தில் ஒரு பொறியியலை உருவாக்கும் முயிற்சியில் ஈடுபட்டுள்ள கான்பூர் ஐஐடிக்கு வாழ்த்துக்கள்,’’ என்றார்.

இந்த மையத்தில், மறுஉற்பத்தி மருத்துவம், மூலக்கூறு மருத்துவம் மற்றும் பொறியியல் மற்றும் டிஜிட்டல் மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி இடம் பெறும். எதிர்காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடியாக இந்த மூன்று துறையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஐடி கான்பூரில் ஏற்கனவே உள்ள உயிரி அறிவியல் மற்றும் உயிரி பொறியியல் (உயிரி மருத்துவ ஆராய்ச்சி) துறையை இந்த மையம் வலுப்படுத்துவதோடு, புதிய பல்வேறு துறைசார்ந்த, தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும்.

இந்தியாவின் மருத்துவ துறையில் ஆராய்ச்சி தொழில்நுட்பத்தால் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும், மருத்துவ பொறியியல் துறையில் அடுத்த தலைமுறை தலைவர்களையும் உருவாக்க வேண்டும்  என்பதே இந்த மையத்தின் நோக்கம்.

கான்பூர் ஐஐடி 1959ம் ஆண்டில், அமெரிக்காவின் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப, பொறியியல் கல்வி நிறுவனம். துவங்கப்பட்ட நாள் முதல் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அறிவியல் சார்ந்த பொறியியல் துறையில்  முன்னோடியாக இருந்து வருகிறது.