தரமான விதை நல்ல விளைச்சலுக்கு ஆதாரம்

பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கவும், விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விளைச்சலை பெருக்கவும் ஏன் விதை பரிசோதனை அவசியம் என்பது குறித்து விதை பரிசோதனை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து, தடாகம் ரோட்டில் உள்ள விதை பரிசோதனை அலுவலர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முக்கிய இடுபொருள் – விதைகள் :

விவசாயத் தொழில் மேன்மேலும் செழித்து வளர விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் மற்றும் இலாபம் ஈட்டினால் மட்டுமே முடியும். நல்ல தரமான விதை நல்ல விளைச்சலுக்கு ஆதாரமாகும்.  விதை தரம் என்பது விதையின் முளைப்புத் திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.  பயிர் எண்ணிக்கையை  பராமரித்தால் மட்டுமே அதிக மகசூல் அடையலாம் என்பது தெரிந்ததே. அதற்கு தரமான விதைகளை விதைத்தால் மட்டுமே பயிர் எண்ணிக்கை சராசரியாக இருக்கும்.

முளைப்புத் திறன் :

வயலில் தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க குறைந்தபட்ச முளைப்புத் திறனுக்கு குறைவு இல்லாமல் இருக்க வேண்டும்.  குறைந்தபட்ச முளைப்புத் திறனாக நெல்லுக்கு 80 சதவீதமும்மக்காச்சோளத்துக்கு 90 சதவீதமும், பயறுவகை பயிர்களுக்கு 75 சதவீதமும், எண்ணெய்வித்து பயிர்களுக்கு 70 சதவீதமும், காய்கறி பயிர்களுக்கு 60 முதல் 70 சதவீதமுமாக இருக்கும். எனவே, விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் விதைகளின் முளைப்புத் திறனை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இதற்காக கோவை தடாகம் ரோட்டில் உள்ள விதை பாரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு ரூ.30 (ரூபாய் முப்பது மட்டும்) என்ற கட்டணத்தில் விதை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான முடிவுகளை அதிகபட்சம் 30 நாட்களுக்குள் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள் ஆகியவை பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதன் முதலாக ISTA அங்கீகாரம் பெற்ற கோவையில் அரசு சார்ந்த முதல் விதை பரிசோதனை நிலையம் என்பதால் BIC மற்றும் OIC  சான்று, விதை பரிசோதனை செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் விதைகள் ஏற்றுமதி – இறக்குமதி செய்வதற்கும் மேலும் தொழிலில் வளர்ச்சி பெறுவதற்கும் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. மேலும் விபரங்கள் அறிய விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், 1424ஏ, தடாகம் ரோடு, கோவை என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி எண்: 0422-2981530