5 பேருக்கு மறுவாழ்வு அளித்த 65 வயது பெண் !

திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம், கம்பர் வீதியில் வசிக்கும் சென்னியப்பனின் 65 வயதுடைய அவரது மனைவி ராஜாமணி கடந்த 14.10.19 தேதி மாலை 6.00 மணி அளவில் அம்மாபாளையத்தில் கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக அவிநாசி ரோடு, கே.எம்.சி.ஹெச்   மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித  முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 24.10.19ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது கணவர் சென்னியப்பன் மற்றும் மகன்கள் சம்பத், சங்கர் அவர்கள் கூறுகையில், ராஜாமணி உயிருடன் இருக்கும்போதே, நான் இறந்தபிறகு எனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவர்களின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனைக்கும், கண்கள், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய ராஜாமணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.