மாணவர்கள் 5 வருடமாவது பாதுகாப்பு துறையில் பணியாற்ற வேண்டும்

நேரு கல்லூரியில் செட்ரிக் மானுவேல் பேச்சு

கோவை மாநகர காவல் துறை மற்றும் நேரு கல்வி குழுமங்கள் சார்பில் பொதுமக்களின் உயிர் காக்க தன் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறையின் சட்டம் மற்றும் ஓழுங்கு உதவி ஆணையாளர் (தெற்கு) ஜெ. செட்ரிக் மானுவேல் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் வரவேற்றார். விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமை ஏற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறையின் சட்டம் மற்றும் ஓழுங்கு துணை ஆணையாளர் செட்ரிக் மானுவேல் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக காவலர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினர், உடல் நலம் மற்றும் உணவு ஆகியவற்றை தியாகம் செய்து நம்மை பாதுகாக்கிறார்கள். நாம் ஒவ்வொரு வார விடுமுறையையும் பண்டிகை விடுமுறையையும் மகிழ்ச்சியுடன் நிறைவு செய்கிறோம். ஆனால் காவலர்கள் அந்த நாட்களில் இருமடங்கு பணிபுரிந்து மக்களை பாதுகாக்கிறார்கள். மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 5 வருடமாவது மத்திய மாநில அரசின் பாதுகாப்பு துறை பணியில் பணியாற்ற வேண்டும்.பொது மக்கள் அரசுக்கும் காவல் துறைக்கும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் அனைவரும் இதே போல் காவல் துறையில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி வேலுத்த வேண்டும், என்றார்.

விழா முடிவில் நேரு விமானவியல் கல்லூரி டீன் பாலாஜி நன்றி கூறினார். மேலும் விழாவில் நேரு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசியரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.