புதுமை தான் நம்மை புதுப்பிக்கும்

 – பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர், அனுஷா

பார்க் கல்வி குழுமம் சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் 89 வது பிறந்தநாள் நினைவாகவும், பொறியாளர் தின கொண்டாட்டமாகவும் “இமாஜினேஷன்” என்னும் விழாநடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பள்ளி மாணவ, மாணவியரின் திறமைக்கு சவாலான அறிவியல், கலை மற்றும் விளையாட்டு போட்டிகளை உள்ளடிக்கியது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 41 பள்ளிகளில் இருந்து 650 மாணவ, மாணவியர்  பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பேடுமேன் என அறியப்படும் அருணாச்சலம் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னதாக போட்டிகளை துவக்கி வைத்த பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர், அனுஷா, பரிசளிப்பு விழாவில் பேசுகையில், 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டதற்க்காக அப்துல் காலம் ஐயா அவர்களிடம் பெற்ற  “கிரீன் கலாம்” விருதை நினைவு கூர்ந்தார்.  அப்துல் கலாம் ஐயாவின் கனவினை அடைவதற்கு மாணவர்கள் இன்னும் உழைக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“இமாஜினேஷன்” என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல, மாணவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளினால் இந்த உலகிற்கு உபயோகமாக இருக்கும் சாதனங்களை உருவாக்க ஊக்குவிக்கும் நிகழ்ச்சி. யாரோ ஒருவர் புதுமையாக சிந்தித்ததனால்தான் பொத்தான் இல்லாத தொடு திரை அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.  நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவேண்டும் என்றார்.

பங்கெடுத்த பள்ளிகளுக்கு துவக்கமாக 10 மரக்கன்றுகளை கொடுத்து, ‘கலாம் வானம்’ எனும் திட்டத்தை துவக்கி வைத்தார்.  இந்த திட்டத்தின் மூலம் பார்க் கல்வி குழுமம் மாணவர்கள் அவர்கள் பள்ளியில் மரம் வளர்க்க உறுதுணையாக இருப்பார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர் அருணாச்சலம் முருகானந்தம், தனது கண்டுபிடிப்பான “சேனிட்டரி பேடு” பற்றியும், அதனை கண்டுபிடித்து உற்பத்தி செய்து மற்றவர்களை உபயோகிக்க செய்து பெண்களின் ஆரோக்கியத்தை பேணி காத்துவரும் தனது பயணத்தை பற்றி பகிர்ந்தது மாணவ மாணவியருக்கு ஊக்குவிக்கும் விதமாக இருந்தது. இவரது செயலால் ஈர்க்கப்பட்டு “பேடு மேன் ” என்னும் இந்தி திரைப்படம், பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வைத்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இது விரைவில் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த படம் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.