கீழடி வரிசையில் புதிய கிராமம்

கீழடி, ஆதிச்சநல்லலூர், அழகன்குளம் வரிசையில் தற்பொழுது பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமும் இணைந்துள்ளது.  பரமக்குடியில் வைகை ஆறு செல்லும் கரையோரத்தை ஒட்டிய கிராமம் ஒன்றில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வைகை ஆறு பாயும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளான ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுக்குச் சான்றாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல் பொருள்கள் கிடைத்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் நடந்த தொல்பொருள்கள் குறித்த முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 5 கட்டங்களாக இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நகரமைப்புகள், மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றின் முகமாக விளங்கிவரும் ஆற்றங்கரை அருகில் உள்ள அழகன்குளத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்விலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்தன. மேலும் கிழக்குக் கடற்கரை பகுதியின் துறைமுக நகரமாக விளங்கிய தொண்டிப் பகுதியிலும் பழைமைமிக்க தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் வைகை ஆறு பாயும் பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் உள்ள ராக்கப்பெருமாள் கோயில் திடலில் நிலப்பகுதியைச் சீர்படுத்தியபோது சுடுமண் ஓடுகள் தென்பட்டன. இதனால் இப்பகுதியில் முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் வைகை நாகரிகம் தொடர்பான சான்றுகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. கடந்த சில நாள்களாக பரமக்குடி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் சரவணன், பெருமாள் கோயில் பகுதியில் உள்ள தொல்லியல் மேடுகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

இவரது ஆய்வின்போது பானைகள், எலும்புகள், செங்கல் போன்றவை உடைந்த நிலையில் கண்டறியப்பட்டன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் கருவேல மரங்களுக்கு இடையேயான பகுதியில் சுடுமண் உறைகிணறு ஒன்றும் அப்பகுதியில் உள்ள இளைஞர்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேல்பகுதி தடிமனாக வடிவமைக்கப்பட்ட நிலையில் 4 சுடுமண் உறைகள் வெளியே தெரிகின்றன.

இதன் மூலம் தமிழகரின் நாகரித்தை பற்றி முழுவது தெரிந்துகொள்ள மேலும் ஒரு கருவியாக இருக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*