சச்சிதானந்த ஜோதி நிகேதன் – ஜெர்மன் பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்லாறு பகுதியில் உள்ள கொனிங்கின்-லூயிஸ்-ஜிம்னாசியம், பள்ளியுடன் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, இரு பள்ளிகளும் தொடக்கத்தில் தகவல் பரிமாற்றம் மூலம் கலாச்சாரப் பரிமாற்றத்தையும், பின்னர் இரு பள்ளிகளுக்கிடையே மாணவர் பரிமாற்றத்தையும் செய்துகொள்ளவிருக்கின்றன.

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் சார்பில், நிர்வாக அறங்காவலர் ராமசாமி, மற்றும்  ஜெர்மனியின், கொனிங்கின்-லூயிஸ்-ஜிம்னாசியம்  பள்ளியின் முதல்வர் மைக்கேல் வால்டர் ஆகியோர், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலர் கவிதாசன், கொனிங்கின் லூயிஸ் ஜிம்னாசியம் ஆசிரியர் பெக்கி ஹோம்ஃபெல்ட்,   துரிங்கியா இன்டர்நேஷனல் இயக்குனர் டாக்டர் ஸ்டீபன் பிளெட்ச்மிட், துரிங்கியா இன்டர்நேஷனலுக்கான இந்திய பிரதிநிதி மைக் பாத்ரா, ஜி.எம்.பி.ஹெச் தலைமை நிர்வாக அதிகாரி வாம்சர், மற்றும் பத்ரா, துரிங்கியா இன்டர்நேஷனலின் தெற்காசியா இயக்குனர் பிரான்சிஸ்கா கிண்டர்வாட்டர், கோயம்புத்தூர் நிகழ்வுகள் மற்றும் ஜி.ஐ.ஆர்.டி தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சென்னையிலுள்ள ஜெர்மன் துணைத் தூதரக அலுவலர் கரின் ஸ்டோல் தனது பாராட்டுரையில், இரு பள்ளிகளுக்கிடையே உறுதியான தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும், ஜெர்மனி மற்றும் இந்தியா இடையேயான நட்புறவு மேம்படும் வகையிலும் கலாச்சாரப் பரிமாற்றம் செய்துகொள்ள முன்வந்துள்ள இரண்டு பள்ளிகளையும் பாராட்டினார்.

பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி தனது உரையில்ஜெர்மனியிலிருந்து வந்துள்ள குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, இந்த ஒப்பந்தம், கலாச்சார ரீதியாக இரண்டு பள்ளிகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் என்று கூறினார்.

இதனையடுத்து பேசிய துரிங்கியா இன்டர்நேஷனல் தெற்காசியாவிற்கான இயக்குநர் பிரான்சிஸ்கா கிண்டர்வாட்டர் இரு பள்ளிகளையும் பாராட்டியதுடன், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஜெர்மனியின் எர்பர்ட் பள்ளியைப்  பார்வையிட அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, ஜெர்மனியிலிருந்து வந்திருந்த விருந்தினர் முன்பாகபள்ளி மாணவியர், இந்திய நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்.

பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன்  வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார். பள்ளியின் மாணவர் தலைவர், மாணவியர் தலைவி, துணை மாணவர் தலைவர், துணை மாணவியர் தலைவி மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.