ஜிஎஸ்டியை மறக்கடித்த மூன்று படங்கள்

ஜிஎஸ்டி பிரச்னை வந்தவுடன் சினிமா டிக்கெட் விலை இரண்டு மடங்கு ஆகிவிட்டது என்று பலர் கூறினர். அதற்காக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் 4 நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு கடைசியில் அது கைவிடப்பட்டது. ஆனால் கடந்த வாரம் இந்த டிக்கெட் விலைப் பிரச்னையை மறக்கடிக்கும் அளவுக்கு மூன்று திரைப்படங்கள் வெளியானது.

விக்ரம் வேதா, மீசையை முறுக்கு, டன் கிர்க் ஆகிய இந்த மூன்று படங்கள் ஒரே தேதியில் வெளியாவதைக் கண்டு மக்கள் சந்தோசம் அடைந்தார்கள். ஏன்னென்றால், விஜய் சேதுபதி, மாதவன் கூட்டணியில் ஒரு படம், இளம் வயதினரை ஈர்க்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் திரைப்படம். உலக சினிமா ரசிகர்கள் மனதில் குடியிருக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த டன் கிர்க் என்ற ஆங்கிலத் திரைப்படம்.

இந்த படங்களுக்கு எப்படி நேரம் ஒதுக்கி பார்க்கலாம் என்று யோசிக்கும் தருணத்தில், விக்ரம் வேதா முதல் காட்சி பார்த்தவர்கள் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் இல் பகிர்ந்துகொண்ட தகவல், தீயாக பரவ ஆரம்பித்து அந்த படத்தின்மீது மக்களுக்கு ஆர்வத்தைக் கூட்டியது. இதையடுத்து மக்கள் அனைவரும் திரையரங்கத்துக்கு படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

‘விக்ரம் வேதா’ திரைப்படக் கதை என்னவெனில், கடமை தவறாத போலீஸ் அதிகாரி மாதவன், நகரத்தில் இருக்கும் ரௌடியிசத்தை ஒளித்துக்காட்டுகிறார். அப்பொழுது விஜய் சேதுபதி தம்பியை என்கவுண்டர் பண்ணும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்கு பிறகு விஜய் சேதுபதியும் மாதவனுக்கும்  நடக்கும் சம்பவங்கள் என்னென்ன என்று எதிர்பார்க்க திருப்பங்களுடன் நம்மை திரையரங்கத்தில் உட்கார வைத்திருப்பது படத்தின் வெற்றிக்கு முதல்படி. மாதவன், விஜய் சேதுபதி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்திருப்பது பார்க்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு இருக்கின்றது. புஷ்கர், காயத்ரி ஆகியோரின்  இயக்கத்தில் முன்னர் வெளிவந்த இரண்டு படங்கள் பெரிய அளவுக்கு பேசப்படவில்லை. ஆனால் அவர்களது இந்த படம் சினிமா உலகத்தில் வெற்றி அடைவதற்கு அவர்களுக்கு ஒரு பாலமாக இருக்கும்.

அடுத்ததாக, இளைஞர்களின் மனம் கவர்ந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு. இசை உலகத்தில் கொடிகட்டி பறக்கும் அவர், தனது சொந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை கொஞ்சம் கற்பனை கலந்து தொகுத்து அனைவரும் ரசிக்கும் அளவில் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இளம் பட்டாம் பூச்சிகள் இவர் படத்திற்கென்று ஒரு தனி இடம் கொடுத்துள்ளர்கள். முதல் படத்திலேயே கதை எனக்கு முக்கியம் இல்லை, திரைக்கதைதான் முக்கியம் என்று படத்தை மிக அழகாக இயக்கி உள்ளார் ஆதி. இளம் வயது ரசிகர்களை கவர வேண்டும் என்றால் மது அருந்தும் காட்சி வைப்பது, பெண்களை கிண்டல் அடிக்கும் வசனம் போன்றவற்றைத் தவிர்த்து இருப்பது, தமிழ் சினிமாவை நல்ல பாதையில் கொண்டுபோக உறுதுணையாக இருக்கும். ஆதி தொடர்ந்து நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவாகியுள்ளது-.

இரண்டு தமிழ்ப் படங்களை பற்றி பார்த்தோம். இனி, உலக சினிமா ரசிகர்களை தன் வசத்துக்குள் வைத்து இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டன் கிர்க்’ படம் குற¤த¢து காண்போம்.

‘டன் கிர்க்’, இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட சில உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கிளாசிக் திரைக்கதைக் களம். இதில் நமக்கு நல்லதொரு படைப்பை தந்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். ஒரு போர் கதைக் களத்தை அதிரடி வடிவத்தில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிளாசிக் ‘டச்’சிலும் சொல்ல முடியும் என்பதை அழகாக உணர்த்திய¤ருக்கார்.

இரண்டாம் உலக போரில் நாமும் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வை உணரும் வகையில் ஒளிப்பதிவாளர் ஹோயத்திவேன் ஹோயத்திமாவின் பணிகள் அமைந்து இருக்கின்றன.

மொத்தத்தில் டன் கிர்க் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம். டிக்கெட் விலை அதிகமானாலும், நல்ல படங்களை நான் கண்டிப்பாக திரையரங்கத்தில் பார்ப்பேன் என்று சொல்லும் அளவுக்கு இந்த மூன்று படங்களும் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

  • பாண்டியராஜ்