வாசிப்புக்கும் வறட்சியா?

கோயம்புத்தூர் தொழில் நகரம் என்ற பெயர் எடுத்திருந்தாலும் இலக்கியத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இங்கு உள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் தரத்துக்கும் ஏற்ப இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் இல்லை என்றே கூற வேண்டும். புத்தகத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் உற்ற நண்பன் என்ற முதலிடம் அதற்கு எப்போதும் உண்டு. ஆனால் பொதுவாகவே தமிழகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் நிலையில் கோவையும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நிலையில்தான் கோவையில் கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவை தங்களது கொடிசியா மைதானத்தில் நடத்தத் தொடங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழா தற்போது இந்த மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. ஓரளவு கூட்டமும் வருகிறது.

என்றாலும் ஒரு உன்னத நோக்கத்துக்காக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழா இன்னும் நல்ல முறையில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றால் சில சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். எல்லா புத்தகத் திருவிழாக்கள், கண்காட்சிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இங்கும் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் அதற்கேற்ற பலன் இங்கு கிடைக்க வில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

வழக்கமாக புத்தகம் படிக்கும் படிப்பாளிகளும் ஆர்வலர்களும் யாரும் அழைக்காமலே இங்கு வருவார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அடுத்ததாக எவ்வளவு அதிகமான மக்களை சென்றடைகிறது என்பதில்தான் இந்த புத்தக திருவிழாவின் நோக்கமும், வெற்றியும் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும், மற்ற பொழுது போக்கு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளும் நடத்தப் படுகின்றன.

ஆனால் இவையெல்லாம் இருந்தும் பெரிய அளவில் கூட்டமோ, விற்பனையோ இல்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அந்த அளவுக்கு  இந்த கண்காட்சி மக்களை சென்றடையவில்லை அல்லது மக்களிடத்தில் புத்தக்த்தின் ஆர்வம் அந்த அளவு இல்லை என்று நாம் ஓப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனவே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடத்தும், மாணவர்களிடத்தும் ஏற்படுத்தம் பணியில் ஈடுபட வேண்டும். இது கொடிசியா போன்ற ஒரு சிறு தொழில்கள் சங்கம் மட்டும் தனியாக செய்யக்கூடிய பணி அல்ல; பதிலுக்கு கொடிசியாவுடன் இணைந்து புத்தக விற்பனையாளர்கள் சங்கம், இலக்கிய அமைப்புகள், பத்திரிகைகள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து  செய்ய வேண்டிய பணி; அதுவும் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். புத்தக திருவிழா நடைபெறும் சமயங்களில் மட்டும் செயல்படுவதாலும், விளம்பரப்படுத்துவதாலும் எந்த மேஜிக்கும் நடந்து விடாது. அதைப்போலவே ஒரே நாளில் இதையெல்லாம் செய்து முடித்து விட முடியாது.  என்றாலும் சில முயற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

அடுத்ததாக நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் போது இன்னும் சிறப்பாக வடிவமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக இலக்கியக்கூடல் என்னும் அரங்கத்தில் சிறப்பு உரைகள் நிகழ்த்தப் பெற்றன. நல்ல ஆளுமை மிக்க பேச்சாளர்கள் நல்ல தலைப்புகளின் பேசினர். என்றாலும் காலை பதினொரு மணிக்கு தொடங்கும் புத்தக திருவிழா அரங்கில் பத்து மணிக்கு இந்த நிகழ்ச்சிக்கு மக்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? கூடவே நாள் முழுதும் நடைபெறும் நிகழ்வுகளில் குறிப்பாக மதியம் இரண்டு மணிக்கு திரளான மக்கள் எப்படி வருவார்கள்?

அதைப்போலவே எழுத்தாளர் வாசகர் சந்திப்பு மையங்கள் இந்த புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவை பெரும்பாலும் காற்று வாங்கும் மையங்களாகவே இருந்தன என்று கூற வேண்டும். மதியம் இரண்டரை மணிக்கு அமைப்பாளர்கள் சொன்னதற்காக ஒரு எழுத்தாளர் வேண்டுமானால் வர முடியும்; ஆனால் வாசகர்கள் எப்படி வருவார்கள் என எதிர்பார்க்க முடியும்?

அதைப்போலவே கொடிசியா மைதானம் எல்லா வகையிலும் இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் நடத்தவதற்கு பொருத்தமான இடம்; என்றாலும் இன்னும் பலருக்கு அது நகரத்தில் இருந்து சிறிது தொலைவு என்ற உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அந்த மனநிலையை மாற்ற வேண்டும். இது கோவை மக்களின் திருவிழா என்ற உணர்வை கொண்டு வரவேண்டும்.

தென்னிந்தியாவில் சென்னை புத்தகத் திருவிழா ஒரு தனித்தன்மை வாய்ந்தது. இப்போதெல்லாம் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறும் நாட்களில் சென்னை மாநகரம் புது பொலிவு பெற்று விடுகிறது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், விமான டிக்கெட் என எல்லாம் புக் ஆகி விடுகின்றன. குடும்பம், குடும்பமாக வந்து குழந்தைகளுடன் புத்தகம் வாங்குவதைக் காண முடியும். அது போல நிலை இங்கும் வர வேண்டும். அந்த அளவு ஊக்குவித்து மக்களை இங்கு வருமாறு செய்ய வேண்டும்.

அதற்கு தேவையான பணிகளை வருடம் முழுவதும் தகுதி வாய்ந்தவர்கள் இணைந்து செய்ய வேண்டும். கோவை நகரத்தைச்சுற்றி இருக்கும் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்களையும் பங்கு பெறுமாறு செய்ய வேண்டும். இப்பகுதியில் உள்ள எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியவர்களுடன் இந்த புத்தகத்திருவிழா தொடர்பான அமைப்புக்குழுவினர் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். புத்தகம் வாசிப்பதை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி, மற்றும் தேவையான இடங்களில் புத்தக அறிமுகங்களை நடத்தி, வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும். புத்தகம் படிப்பவர்கள் அதிகரிக்கும் போதுதான் இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற முடிவதோடு, சமுதாயமும் பயனடைய முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் முழு மனதுடன் பங்கேற்காத எந்த ஒரு பொது நிகழ்வும் வெற்றி பெறாது என்ற உண்மையை உணர்ந்து செயல்படுதல் அவசியமாகும்.

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த முறை இலக்கியக்கூடல் என்ற நிகழ்வில் துறை சார்ந்த இலக்கிய ஆளுமைகள் உரையாற்றியது வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.