இசையில் சுவாரசியத்தைக் காண்பவன் நான்

இசை, அனைத்து ஜீவராசிகளையும் மயக்கும் அற்றலுடையது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  இருக்கும் மகிழ்ச்சி, கோபம், நட்பு, காதல் போன்ற அனைத்து உணர்வுகளையும் ரசிப்பதற்கு இசை ஒரு முக்கியமான ஊடகமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களின் இசைக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அவ்வாறு ஒரு ரசிகராக தன் மனதில் இசை ஆர்வம் ஏற்பட்டவுடன், இசையை முறையாகக் கற்றுக்கொண்டு தன் இசைப்பயணத்தைத் தொடங்கி ‘எங்கேயும் எப்போதும், ‘இவன் வேறமாதிரி, ‘காஞ்சனா 3’, ‘நெடுஞ்சாலை’ போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்த இளம் வயது இசை அமைப்பாளர் சத்யா, தனது ஸ்டுடியோவில் இருந்து நம் “தி கோவை மெயில்”க்கு அளித்த சிறப்பு பேட்டி:

உங்களுடைய முதல் இசை பயணம்?

என் சிறு வயதில் இருந்து எனக்கு இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. இதையரிந்த என் அப்பா நான் ஒரு கிளாசிக்கல் இசைக் கலைஞன் ஆகணும்னு நெனச்சார். என்னுடைய சகோதரர்களும் இசைக் கலைஞர்கள். நாங்கள் சிறுசிறு நிகழ்ச்சிகள், இசைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தோம். அப்படித்தான் என்னு டைய இசைப்பயணம் தொடங்கியது.

உங்களுடைய கல்லூரிக் காலங்கள்?

மறக்க முடியாத நாட்கள். அப்பொழுது தான் நான் கிபோர்ட் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் குழுவில் சேர்ந்து பல ஊர்களுக்கு வாசிக்கச் சென்றேன். அப்போது என் மனதில் தோன்றியது, நாமளும் ஒரு நல்ல இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று.

உங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு?

சினிமாவில் அடியெடுத்து வைப்பவர்கள் முதலில் தோல்விகளையே காண்பார்கள் என்ற பொதுவான கருத்து, எனது வாழ்க்கையிலும் உண்மையானது. நான் முதன் முதலில் இசை அமைத்த படம் நின்று போய்விட்டது. ஆனால் அதற்காக நான் கலங்கி விடவில்லை. அந்த படத்தின்  இசையைக் கேட்ட இயக்குநர் சரவணன், எனக்கு அவரது படத்தில் முதல் வாய்ப்பு வழங்கினார். அத்திரைப்படம் தான் ‘எங்கேயும் எப்போதும்’.

எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் கிடைத்த வெற்றி அனுபவங்கள்?

மிகவும் மகிழ்ச்சியான நாட்கள். அதற்காக இயக்குநர் சரவணனுக்கு நன்றிகள் பல சொல்ல வேண்டும். ஒவ்வொரு பாடலுக்கும் அவர் எனக்கு கொடுத்த சுதந்திரம் என் மனதை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று கூட சொல்லலாம்.

எழுத்தாளர் நா. முத்துகுமாரை பற்றி சொல்லுங்கள்?

நல்ல மனிதர். என் முதல் படத்தில் அவருடன் பணியாற்றிய போது என்னை வியப்பில் ஆழ்த்தியவர். ஒரு நிமிடத்தில் பல புது விஷயங்களை படத்தில் உருவாக்கும் திறமை அவருக்கு மட்டும்தான் இருக்கு. அப்போது நான் அவரது திறமையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

இசை அமைக்கும் முன்பு உங்களை நீங்கள் எப்படி தயார்படுத்திக் கொள்வீர்கள்?

உலகில் நிறைய இசை இருக்கின்றது.  அதில்  நம்  கலாச்சார த்தையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய இசையை மிகவும் கவனமாகக் கேட்டு புரிந்து கொள்வேன். பிறகு நம் மக்களுக்கு என்ன பிடிக்கும், அவர்களை  எப்படி  நம்  இசையால் சந்தோசப்படுத்தலாம் என்று சிந்தித்து பின்னர் இசை அமைக்க ஆரம்பிப்பேன்.

எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களின் இசையைப் பற்றி ?

அவங்களைப்பற்றி பேசுவதற்கே பெருமைப்பட வேண்டும்.  ஒவ்வொருவரும் அவர்களுடைய இசைப்பயணத்தில் ஒரு சரித்திரம் படைத்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் இசையைக் கேட்கும் போதே அவர்களுடைய இசை வேறுபாடுகளைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். இவர்கள் மூன்று பேரும் நமக்குக் கிடைத்த சரித்திர புருஷர்கள்.

உங்களுடைய பின்னணி இசை?

ஒரு படத்திற்குத் தேவையானது பின்னணி இசைதான். நான் இசையமைத்த ‘நெடுஞ்சாலை’படத்தில் சவாலாக இருந்தது பின்னணி இசையே. கதாநாயகன் அறிமுகமாகும் காட்சியில் எனக்கு பிடித்த மாதிரி இசை அமைத்திருப்பேன்.

காட்சி ஆரம்பிக்கும் போது இசை இருக்காது. ஹீரோ ஓடி வரும் போது அதில் இருக்கும் சத்தத்தை வைத்து மியூசிக் ஆரம்பிக்கும். அதைப் பார்க்கும் பொழுதே நாங்கள் அந்த உணர்வை அனுபவித்திருப்பீர்கள். மேலும், படத்தின் இயக்குநருக்கும் பிடித்த காட்சியும் அதுதான். அதைப் பார்த்த பிறகு இயக்குநர் கிருஷ்ணா என்னை மிகவும் பாராட்டினார்.

நடிகர், இயக்குநர் பார்த்திபனைப்பற்றி?

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கக்கூடிய மனிதர். அவருடைய படங்களில் நான் பணியாற்றும் பொழுது எனக்கு கிடைத்த அனுபவங்கள் தனி. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் மற்றும் படங்களை எடுக்கக் கூடியவர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம்.

எதிர்காலத்தில் உங்கள் இசைப்பயணம்?

மிகவும் சுவாரசியமாக இருக்கும். இசையில் உள்ள நல்ல விஷயங்களை, எனது இசைஅமைப்பில் கண்டிப்பாக உணர்வீர்கள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தோசப்படுத்தக் கூடிய அளவுக்கு என் இசைப்பயணம் கண்டிப்பாக இருக்கும்.

திரைத்துறையில் இருக்கும் பிரச்னைகளை பற்றி உங்கள் கருத்து?

மக்கள் அனைவரும் கண்டிப்பாக திரையரங்கில் போய் படம் பார்க்க வேண்டும். எத்தனையோ மக்கள் இந்த சினிமாவை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணையதளத்தில் முறையில்லாமல் வெளி யீடு செய்வதை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் உங்களிடம் கூறிக் கொள்கிறேன்.

உங்களுக்கு பிடித்த ஒரே விஷயம் என்ன?

இசை இசை இசை… மட்டும்தான். என்னைப் போல் உங்களுக்கும் வாழ்க்கையில் உங்களுக்கும் பிடித்த விஷயம் இருக்கும். யாரையும் புண்படுத்தாமல் உங்களைச் சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

– பாண்டியராஜ்.